சென்னை : குரூப்-4 தேர்வில் டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதலில் நியமனம் செய்ய அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ரெகுலர் தேர்வு நடத்தப்படாததால், பல மாவட்டங்களில் டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணியிடங்களில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டது. இந்நிலையில், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு கடந்த 2007ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தற்காலிகமாக பணியாற்றும் டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகள் பணி இழக்கும் நிலை உருவானது. இந்த இடங்களில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்காலிக டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகளை நிரந்தரம் செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
இவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்தது. 1,596 காலியிடங்களில் நியமிப்பதற்காக, இவர்களுக்கு சிறப்பு தேர்வை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், "தேர்வுப் பட்டியலில் இடம் பெறுபவர்களுக்கு காலியிடங்களில் நியமனம் கிடைக்கவில்லை என்றால், எதிர்காலங்களில் உருவாகும் காலியிடங்களில் நிரப்பப்படுவர். சிறப்புத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்' என கூறப்பட்டது. தங்களுக்கு பணியிழப்பு ஏற்படலாம் என கருதிய சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இவர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த "டிவிஷன் பெஞ்ச்', "சிறப்புத் தேர்வு நடந்து அதன் முடிவுகள் வெளியாகும் வரை, மனுதாரர்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது' என இடைக்கால உத்தரவிட்டது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசிதரன் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வக்கீல் நிறைமதி ஆஜராயினர். "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: அரசு பிறப்பித்த உத்தரவின்படி, ஒரே ஒரு முறை தான் சிறப்புத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெற்றி பெறுபவர்கள் மட்டும் தான் வேலை நியமனம் கோர முடியும். ஆனால், அதற்கு முன் நடந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களை விட, இவர்கள் முன்னுரிமை கோர முடியாது என்பது தெளிவாகிறது.
இந்தச் சூழ்நிலையில், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ரெகுலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலில் நியமன உத்தரவுகளை வழங்க வேண்டும். எனவே, இவர்களை முதலில் நியமிக்க அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சிறப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம். எதிர்காலத்தில் காலியிடங்களில் தங்களை நியமிக்க இவர்கள் கோரலாம். இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment