சென்னை, பிப். 20-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாலமாகும். இந்த பாலத்தின் வழியாகத்தான் சென்னை, புதுக்கோட்டை, மதுரை போன்ற ஊர்களுக்கான அனைத்து பேருந்துகளும், வாகனங்களும் செல்கின்றன.
இந்த பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த பாலத்தை அகலப்படுத்தி அதை நான்கு வழிச்சாலையாக மாற்றித் தரவேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டே வருகின்றனர். இது குறித்து கழக நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் வினா எழுப்பியபோது, மேற்படி இடத்தில் புதிதாக பாலம் கட்டி, நான்கு வழிப்பாதை அமைக்க அனுமதி அளித்து, மத்திய அரசின் பங்குத் தொகையை ஒதுக்கிவிட்டதாகவும் பதில் அளிக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு தனது பங்குக்கு நிதியை ஒதுக்காமல் இந்தப்பணிகளை கிடப்பில் போட்டுள்ளது.
திருச்சி பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை தேசிய நெடுஞ் சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த நெடுஞ்சாலையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட சாலைகள் வந்து இணைகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் உபயோகிப்பாளர் சாலையை தி.மு.க. அரசு அமைக்காததால் ஒருபுறம் உள்ள இணைப்புச்சாலையிலிருந்து நெடுஞ்சாலையை கடந்து மறுபுறம் உள்ள இணைப்புச்சாலைக்கு செல்லும்போது பல இடங்களில் விபத்துக்கள் உண்டாகி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் போது, உபயோகிப்பாளர் சாலை அமைத்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்பு களை தடுத்திருக்கலாம். தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் இணைப்புச் சாலைகளிலிருந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து மறுபக்கம் செல்வது என்பது மரணத்துடன் போராடுவதற்கு சமமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது மக்கள் முறையிட்டும் அரசு மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கின்றது.
இதை கண்டித்து திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் வருகின்ற 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.30மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டி. ஜெயக்குமார் எம்.எல்.ஏ. தலைமையிலும், திருச்சி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் மனோகரன், திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணியன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment