Wednesday, February 24, 2010

இந்த சாதனையையும் முறியடித்தார் சச்சின் : ஒன்டேயிலும் டபுள் செஞ்சுரி






குவாலியர் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், கான்வென்ட்ரி மற்றும் சயீத் அன்வர் ஆகியோரின் சாதனையையும் முறியடித்தார். பவுலிங்கில் இந்தியா "தூள் கிளப்ப' தென் ஆப்ரிக்காவை 153 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது. தென் ஆப்ரிக்க அணி மீண்டும் ஒருமுறை பரிதாபமாக வீழ்ந்தது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில், வென்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது போட்டி நேற்று, குவாலியரில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

கார்த்திக் அபாரம்: இந்திய அணிக்கு சேவக், சச்சின் ஜோடி துவக்கம் கொடுத்தது. அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த சச்சின், இம்முறை அதிரடியை துவக்கி வைத்தார். சேவக் (9) நிலைக்கவில்லை. பின் தினேஷ் கார்த்திக், சச்சினும் இணைந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சச்சின் ஒருநாள் அரங்கில் 46 வது சதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 194 ரன்கள் சேர்த்த நிலையில், நான்காவது அரைசதம் (79) அடித்த, தினேஷ் கார்த்திக் பெவிலியன் திரும்பினார்.

30 பந்து, 63 ரன்கள்: பின் யூசுப் பதான், சச்சின் இணைந்து, "பேட்டிங் பவர்பிளே'யில் ரன் மழை பொழிந்தனர். சச்சின் பவுண்டரிகளாக விளாச, யூசுப் பதான் சிக்சர்கள் அடித்து வாண வேடிக்கை காட்டினார். "பேட்டிங் பவர்பிளே'யில் (30 பந்துகள்) சச்சின், யூசுப் பதான் இணைந்து மொத்தம், 63 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில் யூசுப் பதான் (36), மெர்வியின் சுழலில் வீழ்ந்தார்.

சச்சின் சாதனை: அடுத்து வந்த தோனி அதிரடியை தொடர்ந்தார். மறுமுனையில் பார்னல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த சச்சின், ஒருநாள் அரங்கில் 195 ரன்கள் கடந்து புதியஉலக சாதனை படைத்தார். தொடந்து அசத்திய சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்தார். தவிர, இச்சாதனை படைக்கும் முதல் வீரர் இவர் தான்.

இமாலய இலக்கு: மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய தோனி, ஒருநாள் அரங்கில் 54 வது அரைசதம் அடித்தார். சச்சின், தோனி ஜோடி இணைந்து, நான்காவது விக்கெட்டுக்கு 54 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. சச்சின் 200 (147 பந்துகளில் 3 சிக்சர், 25 பவுண்டரி), தோனி 68 (4 சிக்சர், 7 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.

துவக்க சரிவு: இமாலய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு, கிப்ஸ் 7 ரன்னுடன் வெளியேறி ஏமாற்றினார். அடுத்து வந்த மெர்வி (12), கேப்டன் காலிஸ் (11) ஆகியோர் வரிசையாக அவுட்டாகினர். சற்று தாக்குப்பிடித்த ஆம்லா, 34 ரன்களில் வீழ்ந்தார்.

ஆறுதல் சதம்: பீட்டர்சன் (9), டுமினி (0), பவுச்சர் (14) இம்முறையும் அணியை கைவிட்டனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் டி விலியர்ஸ், சர்வதேச அரங்கில் 5வது சதம் கடந்து ஆறுதல் தந்தார். தென் ஆப்ரிக்க அணி 42.5 ஓவரில் 248 ரன் களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது. டி விலியர்ஸ் (114*) ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 2-0 என்ற முன்னிலையுடன், இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றது. ஆட்ட நாயகன் விருதை சச்சின் வென்றார்.

சாதனை ஜோடி: நேற்றைய போட்டியில் இந்தியாவின் சச்சின், தினேஷ் கார்த்திக் ஜோடி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, இரண்டாவது விக்கெட்டுக்கு 177 பந்துகளில் 194 ரன்கள் சேர்த்து, சாதனை படைத்தது. இதற்கு முன் சச்சின், டிராவிட் ஜோடி கடந்த 2000த்தில் (நாக்பூர்) தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, இரண்டாவது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்து இருந்தனர்.

அடாவடி ரசிகர்: நேற்று தென் ஆப்ரிக்க அணியின் ஆல்பி மார்கல், பவுண்டரி எல்லை அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ஏதோ ஒரு பொருளை எடுத்து மார்கல் மீது எறிந்தார். இதையடுத்து அவர் அம்பயரிடம் புகார் செய்ய, ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட்டது.

கடுப்பேற்றிய தோனி: நேற்றைய போட்டியில் சச்சின் இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து சச்சினுக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு தராமல் தோனி, மறுமுனையில் தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். ஒவ்வொரு ஓவரின் கடைசிபந்திலும் ஒருரன் எடுத்துவிட்டு மீண்டும், தனது பேட்டிங்கை தொடர்ந்த தோனி, ரசிகர்களுக்கு கடுப்பேற்றினார்.

5 ரன்கள்: நேற்று சச்சின் 195 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 5 ரன்களை எடுக்க, 26 பந்துகள் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. இதன் விபரம்:

* 45.4 வது ஓவரில் 196 ரன்கள் எடுத்தார்.
* 46.1 ஓவரில் ஸ்டைன் பந்தில், ஒருரன் எடுத்த சச்சின் 197ஐ எட்டுகிறார்.
* 46.3ல் ரன் எதுவும் இல்லை
* 46.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க, 198 ஆகிறது.
* 47.3 ஓவரில் லாங்கிவெல்ட்டின் பந்தில் ரன் இல்லை
* 47.4 ஓவரில் ஒரு ரன் எடுத்த சச்சின் 199ஐ எட்டினார்.
* கடைசியில் 49.3 ஓவரில் லாங்வெல்ட்டின் பந்தை எதிர்கொண்டார் சச்சின். இதில் ஒரு ரன் எடுத்த சச்சின், 200 ரன்கள் கடந்து சாதித்தார்.

No comments:

Post a Comment