Thursday, February 25, 2010

சினிமாவை விழுங்குகிறது ஐ.பி.எல்., கிரிக்கெட்


தியேட்டர்களில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பக் கூடாது என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், வினியோகஸ்தர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், புதிய மோதல் உருவாகியுள்ளது. மீறும் தியேட்டர்களுக்கு புதிய படங்கள் தராமல், "ரெட் கார்டு' போடவும் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் வருகிற 12ம் தேதியிலிருந்து ஏப்ரல் 25ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இப்போட்டிகள் டில்லி, மும்பை, கோல்கட்டா மற்றும் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் 59 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் ஏழு ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டியை தியேட்டர்களில் காண, இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.இதையொட்டி, இப்போட்டிகளை இந்தியா முழுவதும் 450 தியேட்டர்களில் திரையிட, தனியார் நிறுவனங்கள் முயன்று வருகின்றன. தமிழகத்தில் 100 தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப தனியார் நிறுவனம் ஒன்று களமிறங்கி, சென்னையில் ஐநாக்ஸ், பைலட், பேபி ஆல்பர்ட், பி.வி.ஆர்., மதுரையில் மாணிக்க விநாயகர், திருச்சியில் மாரீஸ் காம்ப்ளக்ஸ், கோவையில் கங்கா காம்ப்ளக்ஸ் தியேட்டர் உட்பட 70 தியேட்டர்களில் திரையிட ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், 30 தியேட்டர்களில் ஒப்பந்தம் பேசி வருகிறது. இதன் மூலம் இந்நிறுவனமும், தியேட்டர்காரர்களும் கணிசமான வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளனர்.இந்த முடிவிற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. "தியேட்டர்களில் ஐ.பி.எல்., கிரிக்கெட்டை ஒளிபரப்புவது, சினிமா தொழிலை அழித்து விடும்' என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர்கள் சிலர் கூறியதாவது:எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தமிழ்ப் படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு மாதங்களாக வாரத்தில் நான்கு அல்லது ஐந்து படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் தியேட்டர் பிடிப்பதற்கு போட்டி போடுவதால், சுமாராக ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் கூட திடீரென்று தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டு, அடுத்தடுத்த படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் சினிமா கம்பெனிகள், முன்னணி நடிகர்களின் படங்களை அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டு வருகின்றன.கடந்த ஜனவரியிலிருந்து இதுவரை 18 படங்கள் வெளியாகியுள்ளன. இதில், மூன்று படங்களை தவிர மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையிலும் புதிய பட வெளியீட்டில் போட்டி ஓய்ந்தபாடில்லை. 21 படங்கள் ரிலீசிற்கு தயாராக உள்ள நிலையில், மார்ச் 12ம் தேதியிலிருந்து ஏப்ரல் 25ம் தேதி வரை, 70க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பப்பட உள்ளதால் ஆறு மணி நேரம் தியேட்டரில் இந்த ஒளிபரப்பு இருக்கும். இதனால், இந்நாட்களில் சில காட்சிகள் அல்லது நாள் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலையும் ஏற்படும்.இவ்வாறு தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சென்னையில் உள்ள தியேட்டர் நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது, " ஐ.பி.எல்,, கிரிக்கெட் போட்டிகள் குறிப்பிட்ட தியேட்டர்களில் தான் திரையிடப்படுகிறது; இதற்கு ஒப்பந்தமும் செய்யப்பட்டு விட்டது. ஒப்பந்தத்தை மீற முடியாது. தனி தியேட்டர்களை விட காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் தான் அதிகமாக கிரிக்கெட் போட்டி ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.படம் திரையிட்டு கிடைக்கும் வருமானத்தை விட கிரிக்கெட் போட்டி ஒளிரப்பில் பல மடங்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழி உள்ளது. இப்படியிருக்க தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு எப்படி நாங்கள் தலை ஆட்ட முடியும். திட்டமிட்டபடி தியேட்டர்களில் மார்ச் 12ம் தேதியிலிருந்து 45 நாட்கள் கிரிக்கெட் ஒளிபரப்பப்படும்' என்றும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment