புதுடெல்லி, பிப். 20-
ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கடந்த சில மாதங்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறும்போது, அல்ஜிமர்ஸ் என்ற நோய் தாக்கி இருப்பதாக தெரிவித்தனர். இந்நோய் காரணமாக அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது.
ஜார்ஜ் பெர்னாண்டசின் மனைவி லீலா. இவர்களது மகன் சீன் பெர்னாண்டஸ்.லீலா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 26 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.பெர்னாண்டஸ் உடல்நல கோளாறால் அவதிப்படுவதை அறிந்த லீலாவும், சீன் பெர்னாண்டசும் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர்.
அவரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் இருவரும் அவரை வேறு ஒரு ரகசிய இடத்திற்கு கடத்திச் சென்று சிகிச்சை அளித்து வருவதாக ஜார்ஜ் பெர்னாண்டசின் நண்பர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறும் போது, ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு ரூ.25 கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. அதை கைப்பற்றும் நோக்கத்தில்தான் லீலாவும், அவரது மகனும் பெர்னாண்டசை கடத்திச் சென்றுள்ளனர் என்றனர்.
தற்போது டெல்லியில் உள்ள ஜார்ஜ் பெர்னாண்டசின் வீடு பூட்டிக் கிடக்கிறது. இதனால் அவரது நண்பர்கள், உறவினர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜார்ஜ் பெர்னாண்டசின் நண்பரான முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடா சலய்யா தலைமையில், பெர்னாண்டசை கண்டு பிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் சகோதரர், மைக்கேல் பெர்னாண்டஸ் கூறும்போது, நாங்கள் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க திட்டமிட்டிருந்தோம். அதற்குள் அவரது மனைவி லீலா அவரை எங்கேயோ கடத்திச்சென்று விட்டார். இதனால் நாங்கள் கோர்ட்டு மூலம் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தர விடும்படி வழக்கு தொடர உள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment