நாளின் இறுதி வெளிச்சங்களை
கீற்றுகளாக வழியவிட்ட
சூரியனுக்கு உன்
நீள்கூந்தலை
அலைய விட்டுக் காட்டுகிறாய்
சிவப்பு, செம்மஞ்சளென
எழில் வண்ணம் காட்டி
காற்றிலசையும்
ஒவ்வொரு முடியையும் கண்டு
விட்டுப் போகும் மனமற்று
தேங்கி நின்ற சூரியனை
பொறாமையில் சிவந்து
கடலுக்குள் தள்ளிவிடுகிறது
அந்திவானம்
உன்னிடம் காட்டவென
அலைகள் தள்ளிவிட்டுப்போன
ஏதோவொன்றைக் குனிந்துபார்த்து
கூடியிருந்த குழந்தைகளை அழைத்து
குதூகலமாகக் காட்டுகிறாய்
நானும் குழந்தையென அடம்பிடித்து
உன்னிடமே ஓடிவருகிறது என் மனது
தூக்கி வைத்துக்கொண்டால்தான் என்ன?
No comments:
Post a Comment