புதுடில்லி:மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கண்டுபிடிப்பில் 160 கம்பெனிகள் மோசடி செய்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது.பிரபல ஐ.டி., நிறுவனமான சத்யம் நிறுவனம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் சிக்கிய பின், அதுபோன்ற மோசடிகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில், மத்திய அரசு, கம்பெனி விவகாரத் துறை அமைச்சகத்தின் மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் முறை ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் ஆண்டுக்கு ஒரு தடவை எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகும்.
ஐ.டி., துறையில் நிகழும் மோசடிகளைக் கண்டறிய 10 நிதியியல் வரையறைகள் இந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, கம்பெனி விவகாரத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிறுவனங்களின் சார்பதிவாளரிடம், 130 கம்பெனிகளின் கணக்கு வழக்குகளையும் பரிசோதிக்கும்படிக் கேட்டிருக்கிறோம். மேலும் 30 பொதுத்துறை நிறுவனங்களின் கணக்கு வழக்குகளும் கணக்குத் தணிக்கையாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் இருவரின் பார்வைக்கு விரைவில் வரும்.சில பிரபல முன்னணி நிறுவனங்கள் இந்த முறை மூலம் தங்கள் ஆவணங்களைப் பரிசோதனை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் நாங்கள் அவற்றின் ஆவணங்களை சோதனையிட்டு வருகிறோம்.
நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை, பொது அறிக்கைகள், பணப் பரிமாற்றம் , வரி செலுத்தப்பட்ட விவரங்கள், ஆகியவற்றின் மூலம் நிறுவனங்களின் வளர்ச்சியில் வழக்கத்துக்கு மாறான முன்னேற்றம் இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால், மோசடி செய்த நிறுவனங்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. வேறு சில நிறுவனங்களுக்கு நிதியைத் திருப்பி விட்டது, பாலன்ஸ்ஷீட்டுகளில் முரண்பாடுகள், சொத்துப் பத்திரங்களில் முறைகேடுகள் போன்றவற்றை இ.டபிள்யூ.எஸ்., என்ற ஆண்டறிக்கை மூலம் அமைச்சகம் கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இதுகுறித்து முன் ஒருமுறை கூறுகையில்,"இது ஒரு மருத்துவ பரிசோதனை போலத்தான். முன்கூட்டியே பிரச்னைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை இந்த முறை மூலம் எடுக்க முடியும். ஒவ்வொரு நிறுவனத்தையும் கண்காணிக்கும் நிரந்தரமான முறையை உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். பொது நிர்வாகத்தின் கீழ் இருக்கின்ற மக்களுக்கு அந்த நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது' என்று தெரிவித்தார்.