தற்போதைய செய்தி
வெளியுறவு செயலர்களின் பேச்சு வார்த்தை பாதிக்குமா?
புனே : புனேயில் நடந்த குண்டு வெடிப்பால், வரும் 25ம் தேதி இந்தியா - பாக்., வெளியுறவு செயலர்கள் மட்டத்தில் நடைபெற உள்ள பேச்சு வார்த்தை பாதிக்குமா என்பதற்கு அமைச்சர் சிதம்பரம் பதிலளித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையானது வெளியுறவு விவகாரம் தொடர்பானது. தூதரக ரீதியான அல்லது வெளியுறவு விவகாரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்க நான் இங்கு வரவில்லை.
இந்தப் பிரச்னை பற்றி டில்லியில் விவாதிக்கப்படும். நான் டில்லி சென்ற பின், இது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும்."குண்டு வெடிக்கும்' என உளவுத்துறை தெரிவித்த தகவல்களை, மகாராஷ்டிரா அரசு கண்டு கொள்ளவில்லை எனக் கூறுவது சரியல்ல. முதல்வர் அசோக் சவான் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என நம்பப்படும் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஆனால், பயங்கரவாதிகள் வேறு விதமாக திட்டமிட்டு, குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படையின் விசாரணைக்கு தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும் உதவி செய்வர். யூக செய்திகள் வெளியிடுவதை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும். நம்பகமில்லாத செய்திகளை வெளியிட்டால், அது விசாரணை நடவடிக்கைகளை பாதிக்கும்.காயமடைந்த 57 பேரில், 19 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சிகிச்சை பெற்று வருவோரில் யாரின் நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை. ஆரம்பத்தில் காஸ் சிலிண்டர் வெடித்ததால், வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே குண்டு வெடிப்பு என, உறுதி செய்யப்பட்டது.அறுபது லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான மக்கள் தொகையைக் கொண்ட எந்த நகரமும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக் கூடியதே. அதனால், நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். பொதுமக்களும் உஷாராக இருப்பது நல்லது. இந்த ஒரு சம்பவத்தை வைத்து, இந்திய நகரங்கள் எல்லாம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக் கூடியவை என, எளிதில் முடிவுக்கு வந்து விட முடியாது.இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
No comments:
Post a Comment