Thursday, February 11, 2010

அரசு ஆஸ்பத்திரியில் விலை பட்டியல் பாம்புக்கடி - நாய்க்கடிக்கு ரூ . 100 ஆண்குழந்தை பெற்றால் 500

ஆத்தூர்: அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த சோதனையில் ஏழை நோயாளிகளிடம் எந்த, எந்த நோய்க்கு எவ்வளவு காசு என விலை நிர்ணயப்பட்டியல் போட்டு வசூலித்த விஷயம் அம்பலமாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரியை நம்பி கோடிக்கணக்கான ஏழை நோயாளிகள் உள்ளனர். தனியார் ஆஸ்பத்திரி பக்கமே போகாதவர்களும் உண்டு என்ற நிலை இன்று வரை தமிழகத்தில்  உள்ளது.

இப்படி நம்பி வரும் நோயாளிகளிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வது, நோய்த்தாக்கத்தை விட கொடிய வேதனையை தந்தது. இந்த விஷயம் குறித்து வெளியே சொல்ல அஞ்சியபடி நோய் குணமானால் சரிப்பா என ஆஸ்பத்திரிக்கு புறப்படும்போது கையில் பணத்தை எடுத்து கொண்டு சென்றனர். இந்த விஷயம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு எட்டியது. இதனையடுத்து சேலம் மதுரை உள்ளிட்ட மாவடங்களில் சில குறிப்பிட்ட அரசு ஆஸ்பத்தரிக்கு குறி வைக்கப்பட்டது. இதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் காலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை டி. எஸ்.பி., பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ரங்கராஜன் மற்றும் 17 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலையில் வந்த அதிகாரிகள் நோயாளி போல பாசாங்கு செய்தபடி வந்தனர். முதலில் அனுமதி சீட்டு வாங்க சென்றபோது ஒரு ரூபாய் கொடு என அதிகாரி தோரணையில் கம்பவுண்டர் கேட்க அதிகாரியும் நூறு ரூபாயாக இருக்கிறது என்றதும் இந்த 99 ரூபாய் பிடி என கொடுக்க அடுத்த நபரிடம் 1 ரூபாய்க்கு கை நீட்ட சிக்கினர் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தங்கவேல், முருகன். அடுத்தபடியாக பிரசவ வார்டுக்கு சென்றனர். அங்கு அதிரடி ரெய்டில் வளர்மதி, சிவகாமி, சீதாலட்சுமி சிக்கினர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போல மதுரை மாவட்டம் திருமங்கலம், உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்தரியிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

அட்மிட் ஆனால் 100 ரூபாய் : ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எந்த நோய்க்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது என்ற விவரம் தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. இதன் படி அய்யா பாம்புக்கடிக்கு - 100 ரூபாய், நாய்க்கடித்தால் - 100 ரூபாய், வெட்டு காயங்களுடன் வந்தால் - 300 ரூபாய், பிரசவ வார்டில் கொடுமையோ, கொடுமை. லஞ்சம் உச்சக்கட்டத்தில் எகிறி குதித்திருக்கிறது. இங்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் இங்கு இருக்கும் நர்சுகளுக்கு 500 ரூபாய் கட்டியாக வேண்டும், பெண் குழந்தையாக இருந்தால் ஒரு நூறை குறைத்து 400 ரூபாய். எந்த நோயாளியாக இருந்தாலும் அட்மிட் ஆகும் போது 100 ரூபாய் செலுத்தியாக வேண்டும்.

இவ்வாறு பணம் கொடுத்தால்தான் முறையான கனிவான சிகிச்சை நடக்கும். இல்லாத பட்சத்தில் நாய்க்கடி வேதனையோடு துடிக்க வேண்டியது தான். ஆஸ்பத்தரியில் சோதனை நடத்தப்பட்டதும், சில நோயாளிகள் தாங்களாகவே முன்வந்து புகாரை பதிவு செய்துள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கட்டண சிகிச்சை அக்கம் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment