புதுடில்லி : தலைநகர் டில்லியை பசுமை மயமாக்கும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. நகரில் உள்ள மரங்களை பேணி பாதுகாப்பதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
அதிவேகமாக உலகம் வெப்பமயமாகி வருகிறது. இதனால், காலம் தவறி மழை பெய்வது, கடல் நீர் மட்டம் அதிகரிப்பது போன்ற பல்வேறு இயற்கை பிரச்னைகள் உருவாகின்றன. மரங்கள் வெட்டப்படுவது, உலகம் வெப்பமயமாவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் அனைத்தும் தங்களால் முடிந்த அளவுக்கு மரங்களை வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. தலைநகர் டில்லி, ஒரு காலத் தில் அடர்ந்து வளர்ந்த மரங்களோடு, பச்சை பசேலென பசுமையாக காட்சி அளித்தது. தற் போது, ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. எங்கு பார்த்தாலும் ஒரே கான்கிரீட் மயம் தான். இதனால், ஏற்படும் பிரச்னைகளை நன்கு உணர்ந்துள்ள டில்லி மாநகராட்சி அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளது. தற்போது இருக்கும் மரங்களையாவது பாதுகாக்க வேண் டும் என்ற ஆதங்கத்துடன், புதிதாக ஆம்புலன்ஸ் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பச்சை நிறம் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்று, டில்லி மாநகராட்சியில் தயார் நிலையில் உள்ளது. இதில், இரண்டு தண்ணீர் டாங்குகள், சோப்பு நுரை, ஸ்பிரேயர் உள்ளிட்டவை உள்ளன. வறட்சியால் மரங்கள் காய்ந்த நிலையில் இருந்தாலோ, இலைகள் உதிர்ந்த நிலையில் இருந்தாலோ, அல்லது சாயும் நிலையில் இருந்தாலோ இதுகுறித்து உடனடியாக, பொதுமக்கள் மாநகராட்சிக்கு தகவல் கொடுக்கலாம். உடனடியாக சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்து விடும். அதில் இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள், மரத்துக்கு என்ன பாதிப்பு உள்ளதோ, அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுப்பர். சில மரங்கள், மிகவும் அழுக்கடைந்த நிலையில் இருந்தால், சோப்பு நுரை கொண்டு, ஸ்பிரேயர் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து, அவற்றை கழுவுவர். இதற்காக, 60க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு கைதேர்ந்த நிபுணர்களைக் கொண்டு, தோட்டக் கலை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக் கையை அதிகரிப்பதற்கும், மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டில்லி மாநகராட்சியின் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment