Tuesday, February 9, 2010

காஞ்சீபுரம் அருகே அங்கீகாரம் பெறாத பள்ளிக்கு “சீல்” மேலும் 18 பள்ளிகளுக்கு நோட்டீசு


சென்னை, பிப். 9-
தமிழ்நாட்டில் அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அங்கீகாரம் பெறாத பள்ளிக்கூடங்கள் எங்கெங்கு செயல்படுகிறது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சோதனை நடத்தி அந்த பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 20 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றுக்கு நோட்டீசு அனுப்பினர். அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தினர்.
ஆனால் 2 பள்ளிக்கூடங்கள் அங்கீகாரம் கேட்டு இதுவரை விண்ணப்பிக்காததால் அந்த பள்ளிக்கூடங்களை இழுத்து மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.
காஞ்சீபுரம் அருகே திருப்புகுழியில் செயல்பட்ட தேவி மெட்ரிக் குலேஷன் பள்ளியை கடந்த மாதம் இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதில் படித்த 200 மாணவ - மாணவிகளை 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல் நேற்று ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடத்தில் செயல்பட்ட அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கீகாரம் வாங்காமல் வருடக்கணக்கில் பள்ளி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்த பள்ளிக்கூடத்தை இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத் தனர்.
சீல் வைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியில் கடந்த ஆண்டு வரை 68 மாணவ- மாணவிகள் படித்து வந்தனர்.
இந்த பள்ளி அங்கீகாரம் பெறாத பள்ளி என சில பெற்றோர்களுக்கு தெரியவந்ததால் இந்த ஆண்டு நிறைய பேர் குழந்தைகளை இங்கு சேர்க்கவில்லை. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 18 பேர்தான் படித்து வந்தனர்.
பள்ளி மூடப்பட்டதால் 18 பேரையும் பக்கத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியிலும், மண்ணிவாக்கத்தில் உள்ள நடேசன் மெட்ரிக் பள்ளியிலும் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மோகன்குமார் தெரிவித்தார்.
அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் 18 பள்ளிக்கூட நிர்வாகிகளும் தற்போது அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அந்த மனு மீது ஆய்வு நடத்தி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுபற்றி காஞ்சீபுரம் கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக பல்வேறு பள்ளிகளின் மீது புகார்கள் வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அவற்றை கண்டறிந்து மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதன்படி முதல் கட்டமாக ஒரகடம் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியை பிப்ரவரி 8 முதல் மூடுவதற்கு காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை அருகேயுள்ள பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் யாரும் தங்கள் குழந்தைகளை அரசின் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் சேர்க்கவேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கலெக்டர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment