புதுடில்லி :மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, மத்திய அரசு பணிந்தது. மரபணு கத்தரிக்காயை வர்த்தக ரீதியில் பயிரிடுவதற்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, மேலும் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை வர்த்தக ரீதியில் இந்தியாவில் பயிரிட, அனுமதி அளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயில் பூச்சிகளை கொல்லும் நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாகவும், இதனால், இந்த கத்தரிக்காயை சாப்பிடுவோருக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், ஒரு தரப்பினர் கூறி வந்தனர். விவசாயிகள் மத்தியிலும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.இருந்தாலும், அமெரிக்காவைச் சேர்ந்த மெஹைகோ - மான்சாண்டோ விதை நிறுவனங்கள் இதை மறுத்தன. இந்த கத்தரிக்காயை சாப்பிடும் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், கத்தரிக்காய்க்கு எப்பூச்சி பாதிப்பும் வராது என்பது தான் சிறப்பு என்றும் தெரிவித்தன. கடும் எதிர்ப்பு தொடர்ந்ததை அடுத்து, இதுகுறித்து நாடு முழுவதும் சென்று கருத்துக் கேட்க, மத்திய அரசு முடிவு செய்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கருத்து கேட்டார். பல மாநிலங்களில் மரபணு கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நேற்று முன்தினம் கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "மரபணு கத்தரிக்காயை அறிமுகப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசின் முடிவு, மக்களின் உணர்வுகளை எதிரொலிப்பதாக இருக்கும். மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ம.பி., மாநில முதல்வர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். தமிழக அரசு தலைமைச் செயலரும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்' என்றார்.
இந்நிலையில், மரபணு கத்தரிக்காயை வர்த்தக ரீதியாக பயிரிடுவதற்கு அனுமதி அளிக்கப்படுமா என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என, மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு நாள் முன்னதாக, நேற்றே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
டில்லியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது: மரபணு கத்தரிக்காயை வர்த்தக ரீதியாக பயிரிடுவதற்கு அனுமதி அளிக்கும் விஷயம் தொடர்பாக, விஞ்ஞானிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இது தொடர்பாக மேலும் விரிவான ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இதை அறிமுகப்படுத்துவதில் அவசரம் காட்ட வேண்டிய தேவையும் இல்லை. மக்களின் உணர்வுகள், இதற்கு எதிராக இருப்பதால், இதில் மிகுந்த கவனத்துடனும், முன் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய கடமை எனக்கு உள்ளது.சுதந்திரமாக நடத்தப்படும் ஆய்வின் மூலம், மரபணு கத்தரிக்காய் மிகவும் பாதுகாப்பானது என, மக்களுக்கு ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்தும் முடிவு வெளியாகும் வரை, இதை வர்த்தக ரீதியாக பயிரிடுவதற்கு அனுமதி அளிக்கப்படாது. அதுவரை தடை தொடரும்.சம்பந்தப்பட்ட கம்பெனிகள் தங்கள் ஆய்வுகளை மேலும் தீவிரப்படுத்தி, நன்மை குறித்து விளக்கலாம்.
விஞ்ஞானிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பார்லிமென்ட் மற்றும் தேசிய மேம்பாட்டு கவுன்சிலில் விரிவாக விவாதிக்க விரும்புகிறேன்.கடந்தாண்டு மே மாதம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றேன். அன்று முதல் இன்று வரை, மரபணு மாற்றப்பட்ட பயிர்களுடன் தொடர்புடைய எந்த ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியையும் நான் சந்திக்கவில்லை.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முடிவு, மரபணு கத்தரிக்காய்க்கு மட்டுமே பொருந்தும். எதிர்காலத்தில், மரபணு மாற்றம் செய்யப்படும் மற்ற பயிர்களுக்கு பொருந்தாது.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
அமைச்சரின் முடிவை காங்கிரஸ் வரவேற்றது. "மக்கள் உடல்நலன் மிக முக்கியம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட இம்முடிவு வரவேற்கத்தக்கது' என்று காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்தார்.ஏற்கனவே பிடி கத்தரிக்காய்க்கு தடையை அறிவித்தது பா.ஜ., ஆளும் மாநில அரசுகள். இந்த விஷயத்தில் அரசு, பன்னாட்டு நிறுவனங்கள் பேச்சைக் கேட்டு அவசரப்பட்ட முடிவுகளை எடுத்து விடக்கூடாது என்றும் பா.ஜ., கருத்து தெரிவித்தது.மரபணு கத்தரிக்காய் கடந்த சிலநாட்களாக பெரும் அளவில் பேசப்பட்ட விஷயம் ஆனது. அதை சிறந்த முறையில் கையாண்டு மக்கள் மனம் விரும்பும்படி முடிவை அறிவிப்பதாக ஏற்கனவே கூறிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், நேற்று இந்த விஷயத்தில் அரசின் முடிவை ஆதாரங்களுடன் கூறி பல்வேறு தரப்பு வாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
No comments:
Post a Comment