பொதுத்தேர்வை நடத்துவதற்கான இறுதிக் கட்டப் பணிகளில் தேர்வுத்துறை தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி தினமும் பலர், தேர்வுத்துறை அதிகாரிகளை நச்சரித்து வருகின்றனர்.
அங்கீகாரம் பெறாமல் பல ஆண்டுகள் மெத்தனமாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் மாணவர்களை முன்னிறுத்தி நெருக்கடி கொடுப்பது, தேர்வுத்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளன. முதலில், மார்ச் 1ம் தேதியில் இருந்து பிளஸ் 2 தேர்வுகள் நடக்கின்றன. இன்று முதல் செய்முறை தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வு முடிந்த ஒரு வாரத்தில், எழுத்துத் தேர்வுகள் துவங்கிவிடும். அதனால், தேர்வு பரபரப்பில் மாணவர்களும், பெற்றோரும் மூழ்கியுள்ளனர். அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வழக்கமாக, அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை, அங்கீகாரம் பெற்ற பள்ளி மாணவர்களுடன் சேர்த்து தேர்வெழுத அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். அங்கீகாரம் பெறாதது, பள்ளி நிர்வாகத்தின் தவறு என்பதாலும், அதற்காக மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், அதிகாரிகள் இந்த மாற்று நடவடிக்கை எடுப்பர்.
இந்த முறை, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை பொதுத்தேர்வு பட்டியலில் இருந்து "கழற்றி' விட்டுள்ளனர். மெட்ரிக் பள்ளிகள் மட்டுமில்லாமல், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருப்பது, பொதுத்தேர்வு மூலம் தெரிய வந்துள்ளது. இப்படிப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள், என்ன செய்வதென்று புரியாமல் பதட்டம் அடைந்துள்ளனர். தினமும் பல பேர், மாணவர்கள் பட்டியலுடன், சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு வருகின்றனர். "அங்கீகாரம் பெற்று விடுகிறோம்; இந்த ஒரு முறை மாணவர்களை தேர்வெழுத அனுமதியுங்கள்' என கெஞ்சுகின்றனர். அதிகாரிகளும் வேறு வழியில்லாமல், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தேர்வெழுத அனுமதிக்கின்றனர். நேற்று இரு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், தேர்வுத்துறைக்கு வந்து மாணவர்கள் தேர்வெழுத அனுமதி கேட்டனர். அந்தப் பள்ளிகளின் மாணவர்கள் தேர்வெழுத அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பிறகே, ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இது குறித்து அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, "மாணவர்களின் நலனைக் கருதி, தேர்வெழுத அனுமதிக்கிறோம். ஆனாலும், அங்கீகாரம் பெறாத பள்ளிகள், ஒவ்வொரு ஆண்டும் கடைசி நேரத்தில் நெருக்கடி கொடுப்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. கல்வியாண்டு துவங்கிய ஆறு மாதத்திற்குள், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் பிரச்னையில் இறுதி முடிவு எடுத்தால், கடைசி நேரத்தில் தேவையற்ற பதட்டத்தை தவிர்க்கலாம். மாணவர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படாது' என்றனர்.
No comments:
Post a Comment