Saturday, February 13, 2010

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஆசிரியை துப்பாக்கியால் சுட்டதில் இந்திய பேராசிரியர்- 2 பேர் பலி


வாஷிங்டன், பிப். 13-
அமெரிக்காவில் உள்ள ஹன்ட்ஸ்வில்லே பகுதியில் அலபாமா பல்கலைக்கழகம் உள்ளது. அறிவியல் தொடர்பான படிப்புகளுக்கு இந்த பல்கலைக்கழகம் உலகப்புகழ் பெற்றதாகும்.
இந்த பல்கலைக்கழகத்தின் செல்பை மையத்தில் நேற்று மாலை உயிரியல் துறை சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. செல்பை மையத்தின் 3-வது மாடியில் இந்த கருத்தரங்கம் நடந்தது. அதில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாலை 4 மணி அளவில் கருத்தரங்க கூடத்தில் இருந்த ஒரு பெண் திடீரென எழுந்து வெறி பிடித்தவர் போல மற்றவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதனால் எல்லாரும் அலறியடித்தப்படி ஓட்டம் பிடித்தனர். என்றாலும் அந்த பெண் விடாமல் சுட்டார்.
கண்மூடித்தனமான இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே 3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் இந்திய பேராசிரியர் கோபி பொடிலா. இவர்தான் அலபாமா பல்கலைக்கழக உயிரியல் துறையின் தலைவராக பணியாற்றி வந்தார்.
அவருடன் பலியான 2 பேரும் உதவி பேராசிரியர்கள். அவர்கள் மரியா டேவிஸ், அட்ரில் ஜான்சன் என்று தெரிய வந்துள்ளது. 3 பேர் குண்டு காயங்களுடன் உயிர் தப்பினார்கள். கைத்துப்பாக்கியுடன் மிரட்டிய அந்த பெண் 3-வது மாடியில் அங்கும், இங்கும் நடந்தபடி இருந்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். அதிர்ஷ்டவசமாக மாணவ- மாணவிகள் யாரும் இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்படவில்லை. மாணவ- மாணவிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
துப்பாக்கியால் சுட்ட பெண் போலீசாரிடம் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அவரது பெயர் அமிபிஷப். 42 வயதாகும் அவர் உயிரியல் துறையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
அவருக்கு பணி நீட்டிப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரத்தில் அவர் துப்பாக்கியை தூக்கிவிட்டதாக தெரியவந்துள்ளது.
போலீஸ் விசாரணையில் அவர், இதை நான் செய்து இருக்கக் கூடாது. வேறு வழி இல்லை என்று சொல்லியபடி இருந்தார்.

No comments:

Post a Comment