கொஞ்சம்
புறமுதுகு காட்டிவிட்டு
மாணவச் செல்வங்கள் வளர்க்கும்
மரங்களுக்கும் கொஞ்சம்
மதிப்பெண் போடுவோம்...
பள்ளியின் வளாகத்துக்கு நடுவே இருக்கிறது அந்த பலகை. அதைச் சுற்றிலும் சின்னச் சின்னதாய் மரக்கன்றுகள் தழைத்துச் செழித்து வளர்கின்றன. நெருங்கிச் சென்று பார்த்தால், மரக்கன்றுக்கு அருகே ஒரு பெயர்ப்பலகை. மரத்தின் பெயராக இருக்குமோ என்று பார்த்தால் அதில் இருந்த பெயர்...மு.கிருத்திகா.ஆச்சரியம் மேலிட, திசையெங்கும் திரும்பிப்பார்த்தால் எல்லா மரக்கன்றுக்கு பக்கத்திலும் ஒரு பலகை; அதிலே, ஏதாவது ஒரு மாணவ, மாணவியின் பெயர். அழகாக செங்கல் சுற்றி வைத்து, அதற்கு வெள்ளையடித்து, பாத்தி கட்டி, அக்கறையாய் தண்ணீர் ஊற்றுகிறார்கள் மாணவ, மாணவிகள்.
பள்ளி வளாகமே "பளிச்' என்று இருக்கிறது. மாணவ, மாணவிகளும், அத்தனை சுத்தமாய் இருக்கிறார்கள். அனைத்தையும் பார்த்தபின், ஆச்சரியம் அதிகமானது. காரணம், அது ஓர் அரசுப் பள்ளி. உடுமலை தாலூகவின் ஓர் ஓரத்தில் இருக்கிறது அடிவள்ளி கிராமம்.அந்த கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்தான் இத்தனை அசத்தலும். கோபன்ஹேகனின் தலைவர்கள் கோபமாய்ப் பேசி விட்டு, அவரவர் ஊருக்குத் திரும்பி, அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் களம் இறங்கி விட்டன இந்த மழலைகள்.
இந்த பள்ளியில் முதல் வகுப்பில் யார் சேர்ந்தாலும், அவர்களின் கையால் ஒரு மரக்கன்றை நட்டு வைத்து, அதற்குப் பக்கத்திலேயே அந்த மழலையின் பெயரையும் சூட்டி விடுகிறார்கள். அப்புறம், அந்த மரத்தை வளர்க்கும் பொறுப்பு, அந்த குட்டீஸ் உடையது.காலையும், மாலையுமாக அந்த மரக்கன்றுக்கு மாய்ந்து மாய்ந்து தண்ணீர் ஊற்றும் மழலைகள், வகுப்புக்கு இடையிலும் ஜன்னல் வழியே எட்டி எட்டிப் பார்க்கின்றன. குழந்தைகள் வளர்க்கும் இந்த தாவரப்பிஞ்சுகள், அவர்கள் ஆரம்பக்கல்வி முடிக்கும் முன்னே, அவர்களை மிஞ்சி வளர்ந்திருக்கும்.இங்கேயே எட்டாம் வகுப்பு வரை படித்தாலும், அதுவரைக்கும் மரத்தை பொறுப்பாய் வளர்க்கலாம். வெளியே போய் விட்டாலும், அவ்வப்போது வந்து பார்த்துப் போகலாம். மழலைகள் மனதில் மரம் வளர்க்கும் ஆசையை, பசு மரத்தாணி போல பதிய வைத்திருக்கிறார்கள் இப்பள்ளியின் ஆசிரியர்கள்.
மனதுக்குள் நமக்கு இருந்த மலைப்பைப் புரிந்து கொண்ட தலைமையாசிரியர் மணி, ""சும்மா பேசிக் கொண்டேயிருப்பதால் என்ன பலன் கிடைத்து விடப்போகிறது? சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்று பாடம் சொல்லித் தருவதால், மனதில் பதிந்து விடாது. இங்கே ஒவ்வொரு குழந்தையும் மரத்தை நேசித்து, வளர்ப்பதைப் பார்த்தால், எந்த மனுஷனுக்கும் மரத்தை வெட்டுகிற மனசு வராது. இதே முறையை படிப்படியாக கிராமம் முழுக்க செய்யப்போகிறோம். புவி வெப்பமயமாதலுக்கு எதிராக நாங்கள் போட்டிருப்பது சின்ன விதைதான். இது கற்பக விருட்சமாய் வளர வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை,'' என்றபடி, வளாகம் முழுவதுமாய் தன் பார் வையை விரித்தார்.அவரது விருப்பத்தைப் புரிந்து கொண்டதைப் போல, எல்லா மரக்கன்றுகளும் தலையாட்டி நமக்கு விடை கொடுத்தன. ஏனென்றே தெரியவில்லை, நம்மையும் மீறி கரங்கள் குவிந்தன, முதன் முறையாய் தலைக்கும் மேலே போய்.
No comments:
Post a Comment