மெட்ரிக் பள்ளிகளின் முதல் இயக்குனராக நாராயணசாமி பதவி வகித்த போது, மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்தியதோடு, அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலையும் மாவட்ட வாரியாக தயாரித்து, பெற்றோர் அறிந்து கொள்ள, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும், "அப்டேட்' செய்து வெளியிடவும் நடவடிக்கை எடுத்தார். ஆனால், அவருக்குப் பிறகு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக பல அதிகாரிகள் பொறுப்பு வகித்தபோதும், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை வெளியிட ஏனோ ஆர்வம் காட்டவில்லை.
மெட்ரிக் பள்ளி இயக்ககத்தின் இணையதளத்தில், மெட்ரிக் பள்ளிகளே பெயரை பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. 60 பள்ளிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எந்த மாவட்டம், உயர்நிலைப் பள்ளியா, மேல்நிலைப்பள்ளியா, எந்த இடத்தில் பள்ளி உள்ளது போன்ற எந்த ஒரு விவரமும் கிடையாது. வெறும் பள்ளியின் பெயர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தினரே, பெயரை பதிவு செய்வதை விட, அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பெயர், அமைந்துள்ள இடம், மாவட்டம், எந்த வகுப்புகள் வரை செயல்பட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, எந்த தேதி வரை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, தொலைபேசி எண் போன்ற விவரங்களை, இயக்ககமே மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும். அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் பள்ளிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டால், அது மாணவர்களை விட துறைக்கும் பெரிய உதவியாக இருக்கும். தனியார் பள்ளிகளில் மே மாதம் மாணவர் சேர்க்கை பணிகளை துவக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தாலும், பல தனியார் பள்ளிகளில் இப்போதே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டால், அதைப் பார்த்து பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்க உதவியாக இருக்கும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் சேர்ந்துவிட்டு, பின் மாணவர்களுக்கு பிரச்னை என்றால், அது துறை அதிகாரிகளுக்குத் தான் தலைவலி. இதை உணர்ந்து, இணையதளத்தில் அனைத்து பள்ளிகளின் விவரங்களை வெளியிடுவதோடு, அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் பெயர்கள் அடங்கிய புத்தகத்தையும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் புற்றீசல் போல் ஆயிரக்கணக்கான நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவையெல்லாம், தொடக்க கல்வித் துறையின் கீழ் வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, அரசு அனுமதியுடன் எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,யுடன் செயல்படும் பள்ளிகள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படும் தொடக்கப்பள்ளிகளின் விவரம் இணையதளத்தில் கிடையாது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரமும் இணையதளத்தில் இல்லை. ஒவ்வொரு துறையின் கீழ் வரும் பள்ளிகளின் விவரங்களை, இணையதளத்தில் வெளியிட்டால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
No comments:
Post a Comment