Tuesday, February 9, 2010

கல்வி உதவிகேட்டு போராடி வரும் பெற்றோரை இழந்த பள்ளி மாணவி

ராமநாதபுரம் : பெற்றோர்களை இழந்த நிலையில், கல்வி உதவிகேட்டு போராடி வரும் பள்ளி மாணவியின் நிலை பரிதாபத்துக்குரியதாகும்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செய்யாமங்கலத்தை சேர்ந்தவர் கற்பகம்(17). அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். இவர் பிறந்த மறுநிமிடமே அவரது தாய் அரியவள்ளி இறப்பை சந்தித்தார்.

இதை தொடர்ந்து தந்தை பாஸ்கரன் இறந்து போக, தாய்வழி தாத்தா, பாட்டியின் வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படிப்பை தொடர்ந்து வரும் கற்பகத்துக்கு , உயர்கல்விக்கு அடித்தளம் அமைக்கும் பிளஸ் 2 படிப்பில், பல்வேறு சிக்கல் எழுந்துள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய தாத்தா வீட்டாருக்கு மேலும் சுமையான கற்பகம், தனது படிப்புக்கான செலவை சமாளிக்க சிரமப்படுகிறார். அரசின் உதவியை கேட்டு, உதவ யாரும் முன்வராத நிலையில் ,கலெக்டரிடம் முறையிட முடிவு செய்து, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் முறையிட்டார்.

மாணவி கற்பகம் கூறியதாவது:பிறந்த நாளிலேயே தாயை இழந்து, பின் தந்தையையும் இழந்துவிட்டேன். பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் ஒரு வழியாக பள்ளி படிப்பை தொடர்கிறேன். தாத்தா, பாட்டிக்கு மேலும் சிரமமாக இருக்க விரும்பவில்லை. உதவிகள் கேட்டு போராடி வருகிறேன். கலெக்டரிடம் என்னிலையை விளக்கி உள்ளேன், என்றார்.இந்த மாணவிக்கு உதவ விரும்பினால் 95851-41566, 97867-83244 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment