உலக அளவில் சர்க்கரை நோயின் தலைமையகமாக இந்தியா மாறியிருக்கிறது. உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளார்கள் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் சுமார் நான்கறை கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்தியர்களின் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதை காட்டுவதாக மருத்துவ நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
எபிடெமிக் என்கிற ஆங்கில வார்த்தையை, இதுவரை நாம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிற ஒரு தொற்றுநோயாக குறிப்பிட்டு வந்திருக்கிறோம். சர்க்கரைநோயானது தொற்றுநோயைப் போல வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமல்ல, சர்க்கரை நோய் என்பது குறிப்பிட்ட குடும்பங்கள், சமூகம், மக்கள் தொகையில் ஒருவிதமான தொடர் தொற்றாக உருவாகியிருப்பதையும் நாம் காண்கிறோம். |
பெருகிவரும் இந்த சுகாதார நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான தெற்காசிய நாடுகளின் மாநாடு ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்தது.
World Diabetes Foundationஎனப்படும் உலக நீரிழிவு நோய் நிறுவனம், சர்க்கரை நோய்க்கான சர்வதேச கூட்டமைப்பு, உலக வங்கி மற்றும் ஐ.நா.மன்றத்தின் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து இந்த சர்வதேச மாநாட்டை நடத்தின.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு சர்வதேச நீரிழிவுநோய் நிபுணர்களும், சுகாதார மேலண்மை வல்லுனர்களும் நீரழிவு நோய் தொடர்பில் இந்தியா சந்தித்துவரும் சவால்கள் குறித்தும், அதனை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் விரிவாக விவாதித்தார்கள்.
பொதுவாகவே வசதிபடைத்த நகர்புறவாசிகளின் நோயாக பார்க்கப்படும் சர்க்கரைநோய், இன்று இந்தியாவின் கிராமப் புறங்களிலும் வேகமாக அதிகரித்துவருவதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இளைய தலைமுறை இந்தியர்களிடம் பெருகிவரும் ஒபிசிடி எனப்படும் உடல் பருமன் என்பது எதிர்காலத்தில் நீரிழிவுநோயின் தாக்கத்தை அதிகப்படுத்தும் என்று எதிர்வு கூறுகிறார்க நீரிழிவு நோய் நிபுணர்கள்.
நீரிழிவு நோய் குறித்த சரியான புரிதல் மற்றும் அணுகுமுறை இந்தியாவில் உருவாகிவருகிறதா என்பது குறித்தும், நீரிழிவு நோய் தோற்றுவித்திருக்கும் சுகாதார பொருளாதார சிக்கல்கள் குறித்தும் சொல்லாமல் கொல்லும் சர்க்கரை என்கிற இந்த சிறப்புத் தொடரின் அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment