நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களை கையகப்படுத்தும் ஐகோர்ட்டின் உத்தரவை செயல்படுத்துவதில், முதல்வரால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் இறுதிக் கட்ட ஆய்வை சந்தேகிக்கும் வகையில், வனத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பு, பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில், தனியார் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை நிலங்களில், யானை வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்களை மறித்து, கட்டடங்கள், ஓய்வு விடுதிகள், தனியார் ரிசார்ட்கள் போன்றவை கட்டப்பட்டுள்ளதால், யானைகள் செல்லும் வழியில் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால், இச்சூழ்நிலையில், மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, உயிரிழப்பும், பொருள் இழப்பும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, யானைகளின் வழித்தடங்களை பாதுகாக்கவும், மனிதர்களின் உயிரிழப்புகளை தடுக்கவும், யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இப்பிரச்னை குறித்து நேரில் ஆய்வு செய்ய, மாநில அரசின் சார்பில் சிறப்புக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டனர். சிறப்பு குழுவினர், வனத்துறையின் தொன்மையான வரைபடத்தின் படி, யானை வழித்தடங்களை நேரில் ஆய்வு செய்தனர். இறுதிக் கட்ட ஆய்வுக்கு பின், ஒரு ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டு, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. யானை வழித்தடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகளை, அரசு கையகப்படுத்தலாம் என அந்த நிபுணர் குழுவினர் பரிந்துரைத்தனர்.
மசினகுடி, பொக்காபுரம், சூலூர், கடநாடு, உல்லத்தி போன்ற பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான 7,400 ஏக்கர் பரப்பளவிலான நிலப்பரப்பை கையகப்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில முதல்வரின் ஒப்புதலுக்கு பின், யானை வழித்தட நிலம் குறித்த சர்வே எண்கள், பொதுமக்களின் பார்வைக்காக விளம்பரமாக வெளியிடப்பட்டது. இதில், மசினகுடி, பொக்காபுரம் உட்பட பல பகுதிகளில் பல்வேறு சுற்றுலா விடுதிகளையும் கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல பெரிய "புள்ளி'களின் தங்கும் விடுதிகளும், கல்வி நிறுவனங்களும் உள்ளதால், இதை காப்பாற்றும் முயற்சிகள் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால், அரசு அறிவித்த யானை வழித்தடத்தில் பரப்பு சுருங்கும் அபாயம் ஏற்படும் என வனத்துறை உயர் அதிகாரிகளும், வன உயிரின ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். ஏழை மக்கள் மட்டும் இப்பிரச்னையில் பாதிக்கப்படலாம் என்ற சூழ்நிலையும் உருவாகி வருகிறது.
கடந்த 9ம் தேதி மஞ்சூர் கெத்தை பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த வனத்துறை அமைச்சர் செல்வராஜிடம், யானை வழித்தடம் குறித்து நிருபர்கள் கேட்ட போது, ""நீலகிரியில் இரண்டு, மூன்று யானை வழித்தடங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பின் நானும் ஆய்வு செய்து, புதிய வழித்தடம் குறித்து முடிவு செய்யப்படும்,'' என தெரிவித்தார். இந்த அறிவிப்பு, மாநில முதல்வரால் அறிவிக்கப்பட்ட யானை வழித்தடம் பற்றிய ஆய்வறிக்கையையும், அதன் பின், ஐகோர்ட் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட அரசு விளம்பரத்தையும் சந்தேகிக்கும் படியாக உள்ளதாக, வன உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
"ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறுகையில், ""நம் நாட்டிலேயே முதல் முதலில், யானைகளின் வழித்தடத்தை காக்க வேண்டிய நடவடிக்கையை எடுத்த முதல்வரால் குழு அமைக்கப்பட்டு, அதன் பின், பல நிபுணர்களை வைத்து தான் இறுதிக் கட்டமாக யானை வழித்தட விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய யானை வழித்தடம் உள்ளதாக வனத்துறை அமைச்சர் கூறுவது ஆச்சர்யமளிப்பாக உள்ளது. ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்தாமல், அதை மீறும் வகையில் வாக்குறுதிகளை அளிப்பது, நீதித் துறையையே சந்தேகப்படும் படியாக அமையும்,'' என்றார்.
No comments:
Post a Comment