Thursday, February 11, 2010

குழந்தை படிக்கவில்லையா? பெற்றோருக்கு கடும் அபராதம்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை எனில், சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ராஜஸ்தான், பார்மர் மாவட்டத்தில் உள்ளது துங்கெரோகி தலா என்ற கிராமம். இங்கு மொத்தமே 200 குடும்பங்கள் தான் வசிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கே அனுப்புவது இல்லை. இதனால்,அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள், பல தலைமுறையாக கல்வியறிவு இல்லாமலே வளர்ந்தனர். காலப் போக்கில் தான், இதன் பாதிப்பு அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்களுக்கு தெரியத் துவங்கியது. இதனால், 20 ஆண்டுகளுக்கு முன், கிராம பெரியவர்கள் ஒன்று கூடினர். அதில் நாட்டாமையாக இருந்தவர் அதிரடியாக ஒரு தீர்ப்பை அறிவித்தார். பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது தான், அந்த முடிவு.

இதனால், அபராதத்துக்கு பயந்து கொண்டு, பலரும் தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் துவங்கினர். தற்போது, இந்த கிராமத்தை சேர்ந்த அனைத்து பெண்களும் கல்வியறிவு பெற்றவர்களாக மாறி விட்டனர். இன்னும் பல பெண் கள் நல்ல வேலை கிடைத்து, நகரங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். இந்த கிராமத்தை சேர்ந்த கேசர் என்பவர் கூறுகையில்,"தற்போது எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 180 தான். அதே நேரத்தில் 225 பெண் குழந்தைகள் படிக்கின்றன. இருந்தாலும், மேல்நிலை கல்வி படிப்பதற்கு இங்கு பள்ளி இல்லை. ஆறு கி.மீ., தூரம் நடந்து, அருகில் உள்ள கிராமத்து பள்ளிக்கு தான் செல்ல வேண்டும்' என்றார். இந்த கிராமத்தைப் பின்பற்றி, அருகில் உள்ள கிராமங்களிலும், இதேபோல் அபராதம் விதிக்கும் நடைமுறை தற்போது கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment