Monday, February 8, 2010
ஆஸ்திரேலியாவில் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்தியர்களுக்கு போலீஸ் யோசனை
மெல்போர்ன், பிப்.7: ஏழை போல் நடியுங்கள்; பணக்காரர்களைப் போல் காட்டிக்கொள்ளாதீர்கள். இப்படி நடந்து கொண்டாலே உங்கள் மீது யாரும் கையை வைக்கமாட்டார்கள் என்று இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய போலீஸ் யோசனை வழங்கியுள்ளது. உடலில் அணிந்திருக்கும் தங்க நகைகள் உள்பட விலைமதிப்புள்ள அணிகலன்கள்தான் சமூக விரோதிகளை கவர்ந்திழுக்கின்றன. விலைமதிப்புள்ள பொருள்களை கைப்பற்ற நினைப்போர் பிறரது உயிரை பெரிதாகக் கருதுவதில்லை. ஆயுதங்களால் போட்டுத்தள்ளி நகைகளை கைப்பற்றிச் செல்கின்றனர் என்று விக்டோரியன் மாகாண தலைமை போலீஸ் அதிகாரி சைமன் ஓவர்லேண்ட் தெரிவித்தார். மெல்போர்ன் நகரில் சர்வதேச மாணவர்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சனிக்கிழமை வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு யோசனை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது சைமன் இவ்விதம் யோசனை வழங்கினார். வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகிறது. சமூக விரோதிகளை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்க போலீஸ் ஒருபுறம் நடவடிக்கை எடுத்தாலும், வெளிநாட்டு மாணவர்களும் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதத்தில் நடந்து கொள்வது அவசியம். குற்றச்சம்பவங்களுக்கான காரணங்களை அறிந்து கொண்டு அவற்றில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் தங்கியுள்ள இடம் உங்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்று உணர்ந்தால் உடனே அந்த இடத்தைக் காலி செய்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றிட வேண்டும். பின் இரவு நேரங்களில்தான் அதிகப்படியான குற்றங்கள் நடக்கின்றன. இதனால் இந்த நேரத்தில் வெளியில் பயணிப்பதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்றும் சைமன் யோசனை வழங்கினார். பிரதமர் வரவேற்பு: சைமன் ஓவர்லேண்ட்டின் இந்த யோசனையை விக்டோரியன் பிரதமர் ஜான் பிரம்பி வரவேற்றுள்ளார். வெளிநாட்டு மாணவர்கள் சைமனின் யோசனையை பின்பற்றினாலே சமூக விரோதிகளிடம் இருந்து தப்பித்துவிடலாம் என்று அவர் கூறியுள்ளார். இப்படி யோசனை கூறப்படுவதால் வெளிநாட்டு மாணவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காது என்று நினைக்கக்கூடாது. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை அளிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இனவெறித் தாக்குதலில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும் பிரதமர் ஜான் பிரம்பி கூறினார்.இந்தியர்கள் அமைப்பு கண்டனம்: சைமன் ஓவர்லேண்ட் இப்படி யோசனை கூறியுள்ளதற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் நல அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சைமன் ஓவர்லேண்ட்டின் யோசனையைப் பார்த்தால் ஆஸ்திரேலியாவில் பணக்காரர்களாக வாழ இந்தியர்களுக்கு உரிமை கிடையாது என்பது போல் உள்ளது. இந்த யோசனை கேலிக்கூத்தானது என்றும் அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் குப்தா தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment