Monday, February 15, 2010

நாய்களுக்கு திருமணம் நடத்தி போராட்டம்


கோவை : காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து, பரபரப்பை ஏற்படுத்தினர் இந்து முன்னணியினர். காதலர் தினம் என்ற பெயரில் கலாசார சீரழிவு ஏற்படுத்துவதைக் கண்டித்து இந்து அமைப்புகள் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று காலை, பேரூர் பகுதியில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தது. தகவல் அறிந்த போலீசார்,இத்  திருமணத்தை தடுத்து நிறுத்தி, இந்து முன்னணியினருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், திருமண நிகழ்ச்சிக்கு தயாராக இருந்த ஆண் நாயை அங்கிருந்து இழுத்து சென்றனர்.
அதிருப்தி அடைந்த இந்து முன்னணியினர், நேற்று பகல் 2.00 மணி அளவில், ரத்தினபுரி, கந்தசாமிக்கவுண்டர் வீதியில் கூடினர். அடுத்த சில நிமிடங்களில் வீட்டில் வளர்க்கப்பட்ட ஆண், பெண் நாய்களை கொண்டு வந்தனர். காதலர்களாக சித்தரித்த நாய்களுக்கு மலர் மாலை அணிவித்து, தாலி கட்டினர்.
அடுத்த சில நொடிகளில், காதலனால் கட்டப்பட்ட தாலியை அறுத்தனர். காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கை நிரந்தரமானது அல்ல என்பதை வெளிப்படுத்துவதற்காகவே அந்த தாலி அறுக்கப்பட்டது என இந்து முன்னணியினர் காரணம் தெரிவித்தனர். இதன்பின், அதே நாய்களுக்கு தாலி கட்டி, திருமணம் செய்து வைக்கப்பட்டது. இது பெற்றோர்களாக பார்த்து முடிவு செய்யப்பட்ட திருமணம் என சொல்லப்பட்டது.
30 நிமிடத்தில் முடிந்த இந்த நாய் திருமண காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட இந்து முன்னணி செயலர் சிவலிங்கம்  உள்பட 20 பேர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment