Monday, February 15, 2010

புனேயில் குண்டு வைத்தவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. ஒரு கோடி பரிசு : தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு முடிவு

புதுடில்லி : புனேயில் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்த பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், பேக்கரி எதிரில் உள்ள ஓட்டலின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம், குண்டு வெடிப்பு தொடர்பாக சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின், கோரேகான் பார்க் பகுதியில் ஓஷோ ஆசிரமம் உள்ளது. இதனருகேயுள்ள ஜெர்மன் பேக்கரியில், கடந்த சனியன்று நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில், ஒன்பது பேர் பலியாயினர்; 60 பேர் காயம்அடைந்தனர். இந்த வழக்கை, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்த பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேல்மட்ட அளவில் இந்த பரிசீலனைகள் நடக்கின்றன. விரைவில் முடிவு அறிவிக்கப்படும். பரிசு அறிவிக்கப்பட்ட பின், பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு, அவர்களின் அடையாளம் பாதுகாப்பாக வைக்கப்படுமென, உறுதி அளிக்கப்படும். ஆனால், அவர் கொடுக்கும் தகவல் சரியானதாக இருக்க வேண்டும். இவ்வாறு உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறினார். உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் முக்கிய ஆய்வுகளையும் நடத்தினார்.

இதற்கிடையில், குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஜெர்மன் பேக்கரிக்கு எதிரேயுள்ள, ஐந்து நட்சத்திர ஓட்டலின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்ததில், அதில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்ததில், இரண்டு நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம். பேக்கரியில் குண்டு வைத்தவுடன், அவர்கள் அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள், பேக்கரி குண்டு வெடிப்பிற்கு காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது.

இந்திய முஜாகிதீன்: ஐந்து பயங்கரவாதிகளில், அப்துஸ் சுபான் குரேஷி, ரியாஸ் அகமது பாட்கல், இக்பால் பாட்கல் மற்றும் மோக்சின் சவுதாரி ஆகியோர் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தென் மாநில பிரிவைச் சேர்ந்தவர்கள். அகமது பாட்கல், இக்பால் பாட்கல் இருவரும் சகோதரர்கள். சவுதாரி, புனேயைச் சேர்ந்தவன். ஐந்தாவது பயங்கரவாதி முகமது அம்ஜத் கிவாஜா, ஆந்திரா, ஐதராபாத்தைச் சேர்ந்தவன். சமீபத்தில் இவன் போலீசாரால் கைது செய்யப் பட்டான் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையில், இவ்வழக்கை விசாரித்து வரும் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக நம்பப்படும் ஆறு பேரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில், எந்த பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உண்டு என, தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதில், முதலிடத்தில் இருப்பது இந்தியன் முஜாகிதீன். புனேயில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கோண்ட்வா பகுதியில் சிலரைப் பிடித்து, பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர். குஜராத், டில்லி மற்றும் பெங்களூரு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து தான் கோண்ட்வா பகுதி, போலீசாரின் கண்காணிப்பில் வந்தது. இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.

அதே நேரத்தில், 2008ம் ஆண்டு டில்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு, தற்போது டில்லி போலீசாரின் பிடியில் உள்ள இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாகத் என்ற பயங்கரவாதியிடமும் விசாரணை நடத்த, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் திட்டமிட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் ரகசியமாகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பற்றி, ஷாகத் ஏற்கனவே சில தகவல்களை கொடுத்துள்ளதால், அவனிடம் விசாரணை நடத்தினால், மேலும் பல விவரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றரை கிலோ ஆர்.டி.எக்ஸ்.,: ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பிற்கு ஒன்றரை கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக, தடய அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆர்.டி.எக்ஸ்., பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், அம்மோனியம் நைட்ரேட்டை டீசலுடன் கலந்து வெடிக் கலவையில் சேர்த்திருப்பதாகவும் தகவல் கூறப்பட்டது. விரைவில் தடயவியல் அறிக்கை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.

கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றிய பயங்கரவாதிகள்: கோரேகான் பார்க்கில் உள்ள ஓஷோ ஆசிரமத்தையோ அல்லது யூதர்கள் சமுதாய மையமான சாபத் ஹவுசையோ குண்டு வைத்து தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், அந்த இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அதிகம் இருந்ததால், மக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய இடமான ஜெர்மன் பேக்கரியை தேர்வு செய்திருக்கலாம் என, புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: பயங்கரவாதிகள் குண்டு வைத்த நேரத்தில், பேக்கரியில் இருந்த பெரும்பாலான வெளிநாட்டவர்கள், ஓஷோ ஆசிரமத்தில் இரவு 7 மணிக்கு நடக்கும் தியானம் மற்றும் வழிபாட்டில் பங்கேற்க சென்று விட்டனர். அதனால், உயிரிழப்பு குறைவாக இருந்துள்ளது. குண்டு வெடிப்பு முன்னதாகவே நிகழ்ந்திருந்தால், உயிரிழப்புகள் அதிகமாகியிருக்கும்.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, 2008ம் ஆண்டில் ஓஷோ ஆசிரமத்திற்கும், சாபத் ஹவுசிற்கும் வந்து சென்றுள்ளான். அவன் வந்து சென்றது தெரிந்த பின்னர் தான், இந்த இரண்டு இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பேக்கரியில் பையில் வைக்கப்பட்ட குண்டு, ரிமோட் மூலமோ அல்லது மொபைல் போன் மூலமோ வெடிக்கச் செய்திருக்கலாம். டைமர்கள் எதுவும் வைத்ததாகத் தெரியவில்லை.குண்டு வெடிப்பு நிகழ்த்திய விதத்தைப் பார்க்கும் போது, லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு இதில் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில், இதுபோன்ற குண்டு வெடிப்புகள் காஷ்மீரில் தான் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு புலனாய்வு அதிகாரிகள் கூறினார்.

No comments:

Post a Comment