துபாய் : துபாய், சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு கட்டுமானப் பணிக்கு செல்லும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டது. துபாயில் உள்ள தோரியா இன்டர்நேஷனல் ஜாப் சென்டர் என்ற நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளாக ஆசிய நாடுகளைச் சேர்ந்த கட்டுமானப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்த்து வருகிறது.
துபாய் விமான நிலையம் உட்பட பல முக்கிய கட்டடங்கள், இந்த நிறுவனத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இந்தியப் பணியாளர்கள் மூலம் கட்டப்பட்டவை. சவுதி உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் கட்டுமானப் பணிக்கு இந்த நிறுவனம், தொழிலாளர்களை அனுப்பி வந்தது. ஒரு மாதத்தில் 200 முதல் 400 தொழிலாளர்களை இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் தேர்வு செய்து வந்தது. ஆனால், கடந்த நான்கு மாதங்களில் நான்கு பேர் மட்டுமே வேலைக்கு வந்துள்ளதாக இந்த நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தோரியா இன்டர்நேஷனல் ஜாப் சென்டர் அதிகாரி கூறியதாவது: ஒரு வாரத்தில் 100 பேரை தேர்வு செய்த காலம் எல்லாம் உண்டு. துபாயில் கட்டுமான சந்தை சரிய துவங்கியதால், மூன்று ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டவர்கள், ஓராண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர்.
துபாயில் உள்ள பிரபல நிறுவனத்துக்காக 300 பேரை தேர்வு செய்து கொடுத்தோம். ஆனால், அவர்கள் 200 பேரை திருப்பி அனுப்பி விட்டனர். துபாயில் நிலைமை சரியில்லாவிட்டாலும், சவுதியில் கட்டுமானப் பணிக்கு இன்னும் நல்ல வரவேற்பு உள்ளது. சவுதியில் ஆறு வாரத்தில் ஒரு கட்டுமானப் பணியை துவக்க உள்ளோம். இதற்கு ஆயிரத்து 500 பேர் தேவைப்படுகின்றனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment