Monday, February 15, 2010

சுவிஸ் வங்கிகளின் ரகசியம்: பேணிக்காக்க மக்கள் ஆதரவு


ஜெனீவா : "சுவிஸ் வங்கிகளில் பணத்தை டிபாசிட் செய்துள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிடக் கூடாது. நீண்ட காலமாக பேணிக்காக்கப்பட்டு வரும் இந்த ரகசியத்தை, வங்கிகள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்' என, அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள், தாங்கள் சட்ட விரோதமாக சேர்த்த கறுப்புப் பணத்தை கோடிக்கணக்கில் டிபாசிட் செய்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் இப்படி பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு டிபாசிட் செய்துள்ளதாகவும், இந்தப் பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றும், பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதேபோல், அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ் உட்பட வேறு பல நாடுகளும், சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்துள்ள தங்கள் நாட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றன. இதனால், சுவிஸ் அரசு, சர்வதேச நாடுகளின் நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளிநாட்டவர்களின் கணக்கு விவரங்களை பகிரங்கமாக வெளியிடலாமா அல்லது முன்னர் போலவே ரகசியமாக வைக்க வேண்டுமா என்பது குறித்து, கருத்து கணிப்பு ஒன்று அந்நாட்டு மக்களிடம் நடத்தப்பட்டது. இதில், வெளிநாட்டவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பகிரங்கமாக வெளியிட பெரும்பாலானவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

"வங்கிக் கணக்குகளின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்தப் பாரம்பரியம் தொடர வேண்டும்' என, 15 முதல் 34 வயதிற்கு உட்பட்டவர்களில் 68 சதவீதம் பேரும், மற்றவர்களில் 62 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். இத்தகவல், "மேடின் திமாஞ்சி' என்ற பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கி என்றாலே ரகசியம் காக்கும் வங்கி என்ற நிலை, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. தற்போது அமெரிக்காவும், ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளும் தங்கள் பணம் ரகசியமாக, அதுவும் குறிப்பாக வரி கட்டாதவர்கள் சேமிக்கும் சேமிப்பை ஊக்குவிக்கும் இந்த நடைமுறையை எப்படியும் உடைத் தெறிய சட்ட நடைமுறைகள் கொண்டுவர முயல்கின்றன. இந்த சமயத்தில் இக்கருத்துக் கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment