திருச்சி, பிப். 4: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள படைப்பாற்றல் மற்றும் தொழில் வளர்ப்பக மையம் மூலம் மாணவர்கள் இணைந்து முதலாவது மென்பொருள் நிறுவனத்தை புதன்கிழமை தொடங்கினர். பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள தொழில்நுட்பப் பூங்காவில் கடந்த ஆண்டு படைப்பாற்றல் மற்றும் தொழில் வளர்ப்பக மையம் தொடங்கப்பட்டது. மாணவர்கள் வேலை தேடிச் செல்வதைவிட தொழில் தொடங்க ஊக்குவிப்பதே இந்த மையத்தின் நோக்கம். மேலும், வெளிநாட்டினரின் உதவியின்றி நம் இந்தியர்களே புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பொருள்களை உற்பத்தி செய்ய வைப்பது உள்ளிட்டவை இந்த மையத்தின் பணி. இந்த மையத்தின் மூலம் மாணவர்கள் இணைந்து "டெக்சிஎம்ஆன்டிக்ஸ்' என்ற நிறுவனத்தைக் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கினர். கடந்த ஓராண்டாகத் தொழில் வளர்ப்பக நிலையில் இருந்த இந்த நிறுவனம் உலக அளவில் 40 வாடிக்கையாளர்களைப் பிடித்துள்ளது. மேலும், அண்மையில் 30 மென்பொருள் பொறியாளர்களை நியமனம் செய்தது. இதன் மூலம் இந்த நிறுவனம் முழுமையான நிலையை எட்டியது. இந்நிலையில், பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் திருச்சி மையத் தலைவர் ஜே. லியோ ஆனந்த் இந்த நிறுவனத்தைத் தொடக்கி வைத்தார். இதேபோல, மாணவர்கள் இணைந்து ஐநோ டெக்னாலஜிஸ், பிராவோ சாப்ட் சொலுசன்ஸ் நிறுவனங்கள் தொடங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அடுத்த ஓராண்டில் இந்த இரு நிறுவனங்களும் முழுமை பெறும் என்றார் பல்கலைக்கழக தொழில்நுட்பப் பூங்கா இயக்குநர் கோபிநாத் கணபதி.
No comments:
Post a Comment