Friday, February 12, 2010

கிராமங்களில் நடமாடும் சிகிச்சை மையம் : அப்துல் கலாம் வலியுறுத்தல்


Front page news and headlines today

புதுச்சேரி :கிராமங்களில் நடமாடும் சிகிச்சை மையங்களை அமைத்து ஏழை மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார்.

புதுச்சேரி, ஜிப்மரில் சிறுநீரக நோய் சிகிச்சை தொடர்பான தென்மண்டல கழகத்தின் 30வது ஆண்டு மாநாடு நேற்று நடந்தது. அமைப்பின் செயலர் டாக்டர் சம்பத்குமார் வரவேற்றார். வாஷிங்டன் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் கிறிஸ்டோபர் பிளாக் சிறப்புரையாற்றினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மாநாட்டை துவக்கி வைத்து, சிறந்த டாக்டர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது: இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடி. ஆனால் சிறுநீரக நோயால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.இது மூன்று மடங்காக உயர வேண்டும். சிறுநீரக நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுநீரக நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்கள் தங்களை ஆசிரியர்களாக கருதி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு நோயாளியுடன் மருத்துவமனைக்கு அவரது உறவினர் மற்றும் நண்பர்கள் 10 அல்லது 20 பேர் வருவார்கள்.

இவர்களுக்கு சிறுநீரக நோய் என்றால் என்ன, அதை தடுக்கும் வழிமுறை என்ன என்பது குறித்து டாக்டர்கள் அறிவுறுத்த வேண்டும்.உலகளவில் பார்க்கும்போது சிறுநீரக நோய் சர்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பால் வருகிறது. சரியான நேரத்தில் கண்டுபிடிக்காதது மற்றும் உரிய சிகிச்சை அளிக்காமல் இருப்பதே சிறுநீரக நோய் ஏற்படக் காரணம். சிறுநீரக நோய் உலகில் பெறும் அச்சுறுத்தலாக உள்ளது.சிறுநீரக நோயை தடுக்கும் வசதிகள் நகரப் பகுதிகளில் உள்ளன. இந்த வசதியை கிராமங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்காக கிராமங்களில் நடமாடும் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். இதன் மூலம் ஏழை மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப அவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். நடமாடும் சிகிச்சை மையங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு அரசு செயல்படுத்தலாம்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.விழாவில், டாக்டர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலர் டாக்டர் முருகேசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment