Wednesday, February 10, 2010

பெட்ரோல் - டீசல் விலை நிர்ணயம் ; கருணாநிதியின் கருத்துக்கு மதிப்பு

புதுடில்லி: பெட்ரோலிய -டீசல் விலை உயர்வு குறித்து இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. கிரித்பாரிக் கமிட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த பரிந்துரை செய்தது. இதன்படி விலையை உயர்த்தியாக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்குள்ளானது. ஏற்கனவே விலைவாசி உயர்வு குறித்து மத்திய காங்., அரசு எதிர்கட்சிகளின் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்நிலையில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் லிட்டருக்கு 6 வரை உயர்த்தலாம் என்றும் சமையல் காஸ் ரூ. 100 உயர்த்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. இதன்படி உயர்த்தினால் மக்கள் மத்தியில் காங்கிரஸ் அரசு கடும் விமர்சனத்திற்குள்ளாகும். எனவே எவ்வளவு குறைந்த அளவு உயர்த்தலாம் என மத்திய அரசு யோசித்து வருகிறது.

கருணாநிதி என்ன சொல்வார் ? : இதனையொட்டி பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா சக அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., அமைச்சர் ராசாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பெட்ரோல், டீசல் விலைய உயர்த்தாமல் விட்டு விடலாமா என்றும் சமையல் வாயு விலையை சற்று சிறிய அளவில் உயர்த்திக்கொள்ளலாமா என்றும் பேசப்பட்டது. ஆனால் இது குறித்து மத்திய அமைச்சர் ராசா எவ்வித ஒப்புதலும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பான விஷயத்தில் முதல்வர் கருணாநிதியின் முடிவு என்ன என்பதை பொறுத்து நான் சொல்ல முடியும் என ராசா தெரிவித்ததாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

சோனியா தலைமையில் உயர்மட்டக்குழு கூடுகிறது : இதற்கிடையில் காங்., தலைவர் சோனியா தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று ( புதன்கிழமை ) மாலையில் நடக்கிறது. இது குறித்து இன்றுமாலை முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று (புதன்) மாலை டெல்லியில் நடக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், சோனியா இருவரும் இந்த கூட்டத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தெலுங்கானா விவகாரம் குறித்து விவாதிக்கின்றனர்.

காங்கிரஸ் உயர்மட்டக்குழுவில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர்  ப.சிதம்பரம், பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமதுபடேல் உள்ளனர். இன்றோ,  நாளையோ இது தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும் .

No comments:

Post a Comment