கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே கண்ணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் விஸ்வநாதன் மற்றும் பவுனம்மா. இவர்களது மகள் கவுதமி (22). பொன்னேரி அடுத்த வேம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(30). இவர் சொந்தமாக ஜே.சி.பி., இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் கவுதமிக்கும் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 60 சவரன் நகை, சீர் வரிசைகளை கவுதமி வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர். திருமணத்திற்கு பின் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த கவுதமியிடம், மேலும் 40 சவரன் நகை கேட்டு அடிக்கடி அவர் தொந்தரவு செய்தார்.
இது குறித்து, கவுதமி தன் அண்ணன் பழனியிடம் தெரிவித்தார். வீடு கட்டும் வேலை இருப்பதால், தற்போது வரதட்சணை தர முடியாது என்று பழனி கூறியுள்ளார். அதன்பின், கவுதமிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க ஜெய்சங்கர் அடிக்கடி தன் மாமியார் வீட்டிற்கு வருவதுண்டு. அவ்வாறு வரும்போதெல்லாம் வரதட்சணை கேட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கவுதமியையும், தனது இரண்டு மாத பெண் குழந்தையையும் பார்க்க வந்த ஜெய்சங்கர், இரவு தங்கிவிட்டு காலை செல்வதாக கூறினார். இதையடுத்து கவுதமி, கைக்குழந்தை, தாய் பவுனம்மா, ஜெய்சங்கர் ஆகியோர் ஒரே அறையில் படுத்து உறங்கினர். காலையில் எழுந்து காபி போடுவதற்காக பவுனம்மா சமையல் அறைக்குச் சென்றார். அறையின் கதவை உள்பக்கமாக தாழிட்ட ஜெய்சங்கர், தனது மனைவி கவுதமியின் கழுத்தை புடவையால் நெரித்து மின் விசிறியில் தூக்கிலிட்டு கொலை செய்தார். பின்னர் தன் இரண்டு மாத பெண் குழந்தையின் கழுத்தை துணியால் நெரித்து கொலை செய்துள்ளார்.
இதற்கிடையில், பூட்டிய கதவை பவுனம்மா பல முறை தட்டி பார்த்தும் திறக்கப்படவில்லை. மனைவி, மகளை கொலை செய்த ஜெய்சங்கர் திடீரென கதவை திறந்து ஓட்டம் பிடித்தார். வெளியே அமர்ந்திருந்த பழனி, ஜெய்சங்கரை துரத்திப் பிடித்து பலமாக தாக்கிவிட்டு அருகில் உள்ள வீடு ஒன்றில் அவரை அடைத்து பூட்டினார். கிராம மக்கள் ஆரம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின், போலீசார், ஜெய்சங்கரை கைது செய்து, ஜீப்பில் ஏற்றி கொண்டு சென்றனர். கவுதமி மற்றும் கைக்குழந்தை ஆகியோரது பிணங்களை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொன்னேரி ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.
No comments:
Post a Comment