Saturday, February 13, 2010

எல்லோரும் சைவமானால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து



லண்டன்: பிரிட்டனில் உள்ளவர்கள் மாட்டு இறைச்சி, ஆட்டுக்கறி ஆகியவற்றை சாப்பிடுவதை கைவிட்டு சோயா, சிக்பீஸ், லென்டில்ஸ் ஆகியவற்றை மாற்றாக சாப்பிட ஆரம்பித்தால் அவற்றை விளைவிக்க காடுகளை அழித்து புதிய விளைச்சல் நிலங்களை உருவாக்க வேண்டி இருக்கும். அதனால் சுற்றுச்சூழல் மேலும் மோசமாகப் பாதிக்கப்படும் என கிரேன்ஃபீல்டு பல்கலைகழகம் மூலம் வேர்ல்டு வொயில்டுலைப் ஃபண்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
லார்டு ஸ்டெர்ன் பிரென்ட்ஃபோர்டு உலகின் முன்னணி சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர்களில் ஒருவர். இவர் டைம்ஸ் பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், அசைவ உணவுவகைகளை குறை கூறினார்.
 “அசைவ உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய ஏராளமான தண்ணீர் தேவைப்படுகிறது. அத்துடன் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நச்சு வாயுக்களும் பெருமளவில் வெளியாகின்றன. அதனால் உலகின் உணவு ஆதாரங்களுக்கு பெரும் நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே சைவ உணவே சிறந்ததுÓ என பிரென்ட்ஃபோர்டு கூறினார். இது இறைச்சிக்காக கால்நடைகளை வளர்ப்போர் மத்தியில் பெரும் பெரும்பரபரப்பை கடந்த அக்டோபரில் ஏற்படுத்தியது.
 அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு சைவ உணவு நல்லதா என ஆய்வு செய்ய வேர்ல்டு வொயில்டுலைப் ஃபண்ட் முன்வந்தது. கிரேன்ஃபீல்டு பல்கலைகழகத்திடம் ஆய்வுப் பொறுப்பு தரப்பட்டது. அப்பல்கலைகழகம் ஆய்வுக்குப் பின் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:
மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி வகைகளை தவிர்த்துவிட்டு தானிய வகை உணவுகளுக்கு மாறினால் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் சோயா, சிக்பீஸ், லென்டில் ஆகியவற்றை பயிரிட வேண்டி இருக்கும். அதற்காக காடுகள் கூட அழிக்கப்படும் ஆபத்து உள்ளது. சைவ உணவு உற்பத்தி முறைகள் பெருமளவு மின்சாரத்தை செலவிடுபவைகளாக உள்ளன. அவற்றை தொழிற்சாலைகளில் பெரும் பதப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டி உள்ளது. எனவே சைவ உணவு சுற்றுச் சூழலுக்கு சிறந்ததா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் கூற முடியாது. அசைவ உணவைக் கைவிடுவோர் எத்தகைய உணவுக்கு மாறுகிறார்கள் என்பதைப் பொருத்தே பதில் அமையும் என கிரேன்ஃபீல்டு பல்கலைகழக ஆய்வறிக்கை கூறுகிறது.
கிரேன்ஃபீல்டு பல்கலைகழக ஆய்வறிக்கையை சைவ உணவுக் கழகத்தின் பேச்சாளரான லிஜ் ஓ நீல் குறை கூறினார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விரும்புகிறவர்கள் சைவ உணவுக்கு மாறும் பொழுது எளிய தாவர உணவுக்குத்தான மாற நினைப்பார்கள். 
ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள தானிய தேவை தொடர்பான புள்ளி விவரங்கள் பெரிதும் யூகங்கள்தான். அதனால் இறைச்சித் தொழிலில் ஏற்படுத்தும் பாதிப்பை எந்த வகையிலும் மறைக்க முடியாது என லிஜ் ஓ நீல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment