புதுடெல்லி, பிப். 16-
இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தப்போவதாக அல்கொய்தாவும், பாகிஸ்தான் தீவிரவாதிகளும் மிரட்டல் விடுத்தப்படி உள்ளனர்.
காஷ்மீரை கைப்பற்றுவதற்காக தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட போவதாகவும் அறிவித்துள்ளன.
தீவிரவாதிகளின் சதி திட்டங்கள் தொடர்பாக உளவுத்துறை பல தகவல்களை கண்டுபிடித்து சமீபத்தில் மத்திய அரசை உஷார்படுத்தியது. என்றாலும் தீவிரவாதிகள் புனேயில் கைவரிசை காட்டிவிட்டனர். இந்த நிலையில் அல்-கொய்தா தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு விளையாட்டு வீரர்களை அனுப்பாதீர்கள் என்று அந்த மிரட்டல் தகவலில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் தீவிரவாதியும், அல்கொய்தாவின் மூத்த கமாண்டர்களில் ஒருவனுமான இலியாஸ் காஷ்மீரி பெயரில் இந்த மிரட்டல் தகவல் ஆசியா டைம்ஸ் ஆன் லைனுக்கு வந்துள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் நடக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு இனி எந்த வீரர்கள், வீராங்கனைகளையும் எந்த நாடும் அனுப்பக்கூடாது என்று உலக நாடுகளை கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இந்தியாவில் நாங்கள் கடும் தாக்குதல்களை நடத்தப்போகிறோம்.
இந்தியாவில் விரைவில் உலகக்கோப்பை ஆக்கிப்போட்டி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த போட்டிகளுக்காக வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பவேண்டாம்.
மீறி அனுப்பினால் கிரிக்கெட் வீரர்கள் உள்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்துவோம்.
விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களையும் இந்தியா செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று உலக நாடுகளை எச்சரிக்கிறோம். மீறி அனுப்பினால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. அந்தந்த நாடுகளே பொறுப்பு.
இவ்வாறு அந்த மிரட்டல் தகவலில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த மிரட்டல் தகவலில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment