கோல்கட்டா: கோல்கட்டா டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது. மூன்றாம் நாளான நேற்று, லட்சுமண், தோனி சதம் கடக்க, முதல் இன்னிங்சில் 643 ரன்கள் குவித்து வலுவான முன்னிலை பெற்றுள்ளது. பந்துவீச்சில் சொதப்பிய தென் ஆப்ரிக்காவுக்கு சிக்கல் காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. மிக முக்கியமான இரண்டாவது டெஸ்ட் போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 296 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்திருந்தது. லட்சுமண் (9), மிஸ்ரா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
லட்சுமண் சதம்:நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. சற்று நேரம் தாக்குப்பிடித்த மிஸ்ரா 28 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் லட்சுமணுடன், கேப்டன் தோனி இணைந்தார். இந்த ஜோடி தென் ஆப்ரிக்க பந்து வீச்சை சிதறடித்தது. இவர்களை பிரிக்க தென் ஆப்ரிக்க பவுலர்கள் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்க வில்லை. தனது ராசியான மைதானத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லட்சுமண், டெஸ்ட் அரங்கில் 15 வது சதம் கடந்தார்.
தோனி அதிரடி:மறுமுனையில் அதிரடியாக ரன் குவித்த தோனி, டெஸ்ட் அரங்கில் 4 வது சதம் கடந்தார். தொடர்ந்து இந்த ஜோடி அசத்த, இந்திய அணியின் ரன் வேகம் அதிகரித்தது. 153 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 643 ரன்கள் சேர்த்த நிலையில், முதல் இன்னிங்சை இந்தியா "டிக்ளேர்' செய்தது. லட்சுமண் 143 (16 பவுண்டரி), தோனி 132 (12 பவுண்டரி 3 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் முதல் இன்னிங்சில் இந்திய அணி, 347 ரன்கள் முன்னிலை பெற்றது.
வெளிச்சமின்மை: பின்னர் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது தென் ஆப்ரிக்கா. ஸ்மித், அல்விரோ பீட்டர்சன் களமிறங்கினர். 0. 5 ஓவர் மட்டுமே வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் (5), பீட்டசர்சன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
வெற்றி வாய்ப்பு:தற்போது தென் ஆப்ரிக்கா அணி, 341 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்திய பந்து வீச்சாளர்கள், தென் ஆப்ரிக்காவின் 10 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த வேண்டியது அவசியம். ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால், ஹர்பஜன், அமித் மிஸ்ரா கையில் இந்திய அணியின் வெற்றி உள்ளது.
கிரிக்கெட் பாக்ஸ்
அணி அறிவிப்புஇந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்ரிக்கா மோதுகிறது. முதல் போட்டி வரும் 21 ம் தேதி ஜெய்பூரில் நடக்க உள்ளது. இத்தொடரின் முதல் 2 போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக துவக்க வீரர் கவுதம் காம்பிருக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் யூசுப் பதான் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். இஷாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அறிமுக வீரராக தமிழக சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்வாகி உள்ளார். அணி வருமாறு:
தோனி (கேப்டன்), சேவக், சச்சின், விராத் கோஹ்லி, ரெய்னா, தினேஷ் கார்த்திக், ரவிந்திர ஜடேஜா, அபிஷேக் நாயர், யூசுப் பதான், ஜாகிர் கான், நெஹ்ரா, சுதீப் தியாகி, பிரவீண் குமார், அமித் மிஸ்ரா மற்றும் அஸ்வின்.
ராசியான மைதானம்நேற்றைய போட்டியில், இந்திய வீரர் லட்சுமண் 102 ரன்கள் எடுத்திருந்த போது, கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் 1000 ரன்கள் சேர்த்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இங்கு இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள லட்சுமண், 4 சதம் 3 அரை சதம் உட்பட 1041 ரன்கள் எடுத்துள்ளார். லட்சுமணுக்கு கோல்கட்டா மிகவும் ராசியான இடம். இங்கு தான் 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் விளாசி, அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார். இது குறித்து லட்சுமண் கூறியது:
ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம். ரசிகர்கள் அளித்த ஆதரவு தான், என்னை மீண்டும் சாதிக்க வைத்திருக்கிறது. 7 வது வீரராக களமிறங்கிய தோனியின் ஆட்டம், பாராட்டத்தக்கது. தோனி மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேன். எந்த நெருக்கடியும் இன்றி, விரைவாக சதம் கடந்தார். தோனியுடன் இணைந்து ரன் குவித்தது, இந்திய அணியை நெருக்கடியிலிருந்து மீட்டுள்ளது.
இன்று எனது திருமண நாள். முக்கிய நாளான இன்று சதம் கடந்தது மறக்க முடியாத தருணம். எனது சிறப்பான செயல்பாடுகளுக்கு முக்கிய காரணம் எனது மனைவி தான். கிரிக்கெட் வீரர்களுக்கு மனைவியாக இருப்பது மிகவும் கடினமான செயல். ஏனென்றால் ஆண்டின் பெரும்பகுதி சுற்றுப்பயணம் செய்ய வேண்டியதாயிருக்கும். எனது சதத்தை எனது மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு லட்சுமண் தெரிவித்தார்.
இதுவே அதிகம்கோல்கட்டா டெஸ்டின் முதல் இன்னிங்சில் எடுத்த 643 ரன்களே, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் அதிக பட்ச ஸ்கோராகும். இதற்கு முன், கடந்த 2008 ம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்டில், இந்திய அணி 627 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
* ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா தனது 2 வது அதிகபட்ச ஸ்கோரை (643 ரன்) நேற்று பதிவு செய்தது. கடந்த 2001 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு 657 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும்.
2 வது முறைகோல்கட்டா டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் சேவக் (165 ரன்), சச்சின் (106 ரன்), லட்சுமண் (143 ரன் *), தோனி (132 *) ஆகிய நான்கு பேரும் சதம் கடந்துள்ளனர். டெஸ்ட் அரங்கில் இந்திய அணி 2 வது முறையாக இப்பெருமை பெற்றுள்ளது. இதற்கு முன் கடந்த 2007 ம் ஆண்டு, வங்கதேசத்துக்கு எதிரான மிர்புர் டெஸ்டில், இந்தியாவின் தினேஷ் கார்த்திக் (129 ரன்), வாசிம் ஜாபர் (139 ரன்), ராகுல் டிராவிட் (129 ரன்), சச்சின் (122 ரன்*) ஆகியோர் சதம் கடந்திருந்தனர்.
முதல் சதம் இந்திய கேப்டன் தோனி (132*), தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக தனது முதல் சதத்தை நேற்று பதிவு செய்தார். தவிர, கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இவர் அடிக்கும் முதல் சதம் இது.
* இந்தியா தரப்பில் டெஸ்ட் அரங்கில் இதுவரை 4 சதம் பதிவு செய்துள்ள விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் தோனி.
யாருக்கு அதிர்ஷ்டம்நாக்பூர் டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி, டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை கைப்பற்ற வேண்டும் எனில் கோல்கட்டா போட்டியை "டிரா' செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் இந்திய அணிக்கே, இப்போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் தனது "நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment