உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம் உடைய மிகப் பெரிய மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வி முறைக்கு மாறுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இது தொடர்பாக, பெற்றோரிடமும் பள்ளி நிர்வாகங்கள் ஆலோசனை கேட்டு வருகின்றன.
"ஸ்டேட் போர்டு வேண்டுமா; சி.பி.எஸ்.இ., வேண்டுமா' என பெற்றோரிடம் மெட்ரிக் பள்ளிகள் கேட்டு வருவதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், வரும் ஜூன் மாதம் சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது. முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு வரும் கல்வி ஆண்டிலும், அதற்கு அடுத்த கல்வியாண்டில் மற்ற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகிறது."இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் பாடத் திட்டங்கள் தரமானதாக இருக்கும்' என்று, தமிழக அரசும், கல்வித்துறை உயர் அதிகாரிகளும் பலமுறை வாக்குறுதி அளித்தாலும், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிடையே குறிப்பாக, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெரிய பள்ளிகளிடையே ஒருவித தயக்கம் நிலவுகிறது. இந்த பள்ளிகளின் பெற்றோரிடமும் தயக்கம் இருக்கிறது.
அரசு பள்ளிகளில் நடத்தப்படும் அதே பாடத்திட்டத்தை மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் நடத்தினால், வித்தியாசம் இருக்காது என்றும், அப்படி நடத்தினால் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் என்றும், தனியார் பள்ளிகள் கருதுகின்றன. இதனால், சி.பி.எஸ்.இ., முறைக்கு மாறுவது குறித்து, பல பள்ளிகள் ஆலோசித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள சில மெட்ரிக் பள்ளிகள், பள்ளி வளாகத்திற்குள் புதிதாக சி.பி.எஸ்.இ., பள்ளியை துவக்க நடவடிக்கை எடுத்துள்ளன.இதற்கிடையே, "ஸ்டேட் போர்டு வேண்டுமா; சி.பி.எஸ்.இ., வேண்டுமா' என, பெற்றோரிடம் கடிதம் கொடுத்து, பல பள்ளிகள் கருத்துக்களை கேட்டு வருகின்றன. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ரிக் பள்ளி, பெற்றோருக்கு நோட்டீஸ் வினியோகித்து, கருத்து கேட்டுள்ளது.
அப்பள்ளி விடுத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருவதையொட்டி, அனைத்து மெட்ரிக் பள்ளிகளும், "ஸ்டேட் போர்டின்' கீழ் கொண்டுவரப்பட உள்ளன. வரும் ஆண்டுகளில் சி.பி.எஸ்.இ., அங்கீகாரத்தை பெறுவது குறித்தும், பள்ளி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.ஸ்டேட் போர்டிலேயே தொடர்ந்து இருக்கலாமா அல்லது சி.பி.எஸ்.இ., முறைக்கு மாறலாமா என்பது குறித்து, பெற்றோர் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில், உரிய முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீரென, "ஸ்டேட் போர்டு வேண்டுமா; சி.பி.எஸ்.இ., வேண்டுமா' என கேட்டுள்ளதால், பெற்றோர், குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் கூறும்போது, "விசாலமான இடமும், உள் கட்டமைப்பு வசதிகளும் கொண்ட மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., முறைக்கு மாறுவதற்கு முடிவெடுத்துள்ளன. சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்றுவிடுவோம் என்று கூறி, சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. எந்த முறையின் கீழ் பள்ளியை நடத்துவது என்பது குறித்து, பள்ளி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், பெற்றோரை குழப்பும் வகையில் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன' என்றார்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க வேண்டுமெனில், பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து, தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.,) பெற வேண்டும். சமச்சீர் கல்வி அமலாவதன் எதிரொலியாக, சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பினால், அதை தமிழக அரசு ஏற்காது என்று தெரிகிறது.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "இதுவரை என்.ஓ.சி., கேட்டு யாரும் விண்ணப்பிக்கவில்லை. அதிகமான தனியார் பள்ளிகள், வேறு கல்வி முறைக்கு மாற விரும்பி, என்.ஓ.சி., கேட்டு விண்ணப்பித்தால், அது குறித்து தமிழக அரசுடன் ஆலோசனை செய்தபிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
No comments:
Post a Comment