Tuesday, February 9, 2010

வேகமாக முன்னேறுகிறது இந்தியா : மத்திய புள்ளியியல் துறை தகவல்

சென்னை :"பொருளாதார மந்த நிலையிலிருந்து வேகமாக மீண்டுவரும் நாடுகளில் சீனாவை தொடர்ந்து இந்தியா, இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மத்திய புள்ளியியல் துறையின் ஆய்வுப்படி, கடந்த ஆண்டில் மட்டும் 6.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. வரும் ஆண்டில் இது 7.2 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.


வருடத்தின் முதல்பாதியில் மந்தமாக காணப்படும் ஜி.டி.பி., வளர்ச்சி, வருடத்தின் பிற்பகுதியில் வேகமாக முன்னேற வாய்ப்புள்ளது' என, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டு விவசாயத் துறையில் வளர்ச்சி 1.6 சதவீத இழப்பும், நடப்பு வருடத்தில் இழப்பு 0.2 சதவீதமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருள் உற்பத்தி சார்ந்த தொழில்களில் கடந்த ஆண்டு 3.2 சதவீத வளர்ச்சியும், நடப்பு வருடம் 8.9 சதவீத வளர்ச்சியும் இருக்கும் என்று தெரிகிறது.ஏற்றுமதி, போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறையில் 6.5 சதவீத வளர்ச்சியும், நிதியுதவி, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரத் துறையில் 10.1 சதவீத வளர்ச்சியும் பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.


மேலும், சமூகம் மற்றும் தனிப்பட்ட மனிதர்களுக்கான செலவுகள் கடந்தாண்டு 13.9 சதவீதமாகவும், நடப்பு ஆண்டு 9.9 சதவீதமாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு உணவுப்பொருள் விலை ஏற்றத்திற்கு காரணம், பருவம் தவறி பெய்த மழையால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி பாதிப்படைந்ததே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய புள்ளியியல் துறையை தவிர்த்து, மத்திய நிதி அமைச்சகத்தின் ஆய்வின்படி நடப்பு ஆண்டு ஜி.டிபி., வளர்ச்சி 7.75 சதவீதமாகவும், ரிசர்வ் வங்கியின் ஆய்வுப்படி 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment