புதுச்சேரி திட்டங்களை ஆய்வு செய்ய வருகிறார் சிதம்பரம்
புதுச்சேரி, பிப். 9: புதுச்சேரியின் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.புதுச்சேரி யூனியன் பிரதேசம் சட்டப் பேரவையைப் பெற்றிருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கிறது. புதிய திட்டங்களை அமல் செய்யும் முன்பாகவும், புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்பாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவை. மேலும் புதுச்சேரிக்கு உரிய நிதியுதவி போன்றவற்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில்தான் பெற முடியும்.புதுச்சேரி அரசு நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு நலத்திட்டங்களையும் வளர்ச்சித் திட்டகளையும் அமல்செய்ய முடியாமல் திணறி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு 6-வது ஊதியக் குழு சம்பளம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை இன்னமும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு ஏற்கெனவே கோரியுள்ளது.புதுச்சேரிக்கு போலீஸ் பயிற்சி உள்ளிட்ட போலீஸ் நவீனமய திட்டத்துக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய அரசிடம் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் கோரிக்கை வைத்துள்ளார்.இந்நிலையில் புதுச்சேரிக்கு இம் மாதம் 15-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வருகிறார். புதுச்சேரியின் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் உள்பட பல்வேறு நிலைகளிலும் சிதம்பரம் ஆய்வு செய்கிறார். விதிமுறை மீறல்?தனியார் பங்கேற்புடன் புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அமல்செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் இத் திட்டத்துக்கான நிலங்களை தனியார் நிறுவனத்திடம் புதுச்சேரி அரசு ஒப்படைத்தது. இதில் விதிமுறை மீறல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கில் சுட்டிக் காட்டியுள்ளது. இதனால் இத் திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் சம்பளம் உயர்த்தியதாகத் தெரிகிறது. இதற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆட்சேபணை தெரிவித்துள்ளதாகவும், அதற்கு புதுச்சேரி அரசு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், "எம்எல்ஏக்களுக்கு சம்பளம் உயர்த்தப்படவில்லை. அவர்களுக்குப் பல்வேறு படிகள்தான் உயர்த்தப்பட்டுள்ளன' என்று விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இது போன்று நிர்வாக ரீதியாக நடந்துள்ள விதிமுறை மீறல்கள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆய்வு செய்வார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment