Monday, February 8, 2010

'பிரிட்டிஷ் விசா விதிகள் மேலும் கடுமையாகிறது'

லண்டன்,​​ பிப்.​ 7:​ வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவதற்கான விதிகளை பிரிட்டிஷ் அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.வட இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திவைப்பதாக கடந்த வாரம் பிரிட்டன் தெரிவித்திருந்தது.​ இந்நிலையில் மாணவர்களுக்கான விசா விதிகளை மேலும் கடுமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.​ மாணவர்களுக்கான விசா மூலம் பிரிட்டன் வருபவர்களில் பெரும்பாலோர் வேலைக்காகவும்,​​ வேலை தேடுவதற்காகவும் வருவது தெரியவந்துள்ளது.இதனால் விசா விதிகளை கடுமையாக்கியுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக செயலர் ஆலன் ஜான்சன் தெரிவித்தார்.​ இருப்பினும் உண்மையான காரணங்களுக்காக வெளிநாட்டு மாணவர்கள்,​​ மாணவர் விசா மூலம் பிரிட்டன் வருவதை வரவேற்பதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:படிப்பதற்கு என வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எந்தவித தடையும் ஏற்படுத்தப்பட மாட்டாது.​ ஆனால் மாணவர் விசா போர்வையில் இங்கு வந்து வேலை செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது.​ அதனால் விசா விதிகளை தற்போது கடுமையாக்கியுள்ளோம்.​ பிரிட்டன் வரும் இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேராத வெளிநாட்டு மாணவர்கள் ஆங்கிலப் புலமை பெற்றிருப்பது அவசியமாகிறது.​ பட்டப்படிப்புக்கும் கீழே படிக்கும் மாணவர்கள் வாரத்துக்கு 20 மணி நேரம் வேலை செய்யலாம் என்ற விதி தற்போது கடுமையாக்கப்பட்டு 10 மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது.பட்டப்படிப்புக்கும் குறைவான நிலையில் உள்ள படிப்புகளுக்காக விசா கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு,​​ அவர்கள் படிக்க வரும் கல்வி நிலையங்கள் மூலம் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்றார்.கடந்த 2008-09-ல் பிரிட்டிஷ் அரசு 2.40 லட்சம் மாணவர்களுக்கு விசா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment