Monday, February 8, 2010
தலையங்கம்: அரசாங்க மோசடி!
தொன்றுதொட்டு ஓர் அரசின் அடிப்படைக் கடமை என்று கருதப்படுபவை, தேசத்தின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது, சாலைகள் அமைத்தல், சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவைதான். கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசு பொருளாதார தாராளமயமாக்கல் என்கிற கொள்கையை ஏற்றுக்கொண்டது முதல் இந்த அடிப்படைக் கடமையைக்கூடத் தனியாருக்குத் தாரை வார்த்துவிடத் தொடங்கி இருக்கிறது என்பதுதான் வேதனைக்குரியது.சாலைகளை அமைப்பது என்பது நிச்சயமாக வளர்ச்சியின் அறிகுறி என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத் துறை முன்வைத்த தங்க நாற்கரச் சாலைத் திட்டம் என்பது சுதந்திர இந்திய சரித்திரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு.நெடுஞ்சாலைகள் ஒருபுறம் வளர்ச்சியின் அடையாளங்களாகத் தென்பட்டாலும் இன்னொருபுறத்தில் பல்லாயிரம் ஏக்கர் விவசாய சாகுபடி நிலங்களைக் கபளீகரம் செய்பவை. கார் மற்றும் கனரக லாரி உற்பத்தி நிறுவனங்களுக்கும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வரப்பிரசாதமாக இந்த நெடுஞ்சாலைகள் ஒருபுறம் அமைவதும், மறுபுறம் லட்சக்கணக்கான சிறு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவில் நிற்பதும் ஒரே நாணயத்தின் இருவேறு முகங்கள்.சாலைகள் உலகத் தரத்தில் இருக்கின்றன, நாங்கள் விரைவாகச் செல்ல முடிகிறது என்று காரிலும் பஸ்ஸிலும் பயணிப்பவர்கள் மகிழ்ச்சி அடையும் அதேவேளையில், இந்த மலைப்பைப் பயன்படுத்தி மிகப்பெரிய வசூல் மோசடி நடைபெறுவது அவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. "கண்கட்டு வித்தை' என்பார்களே அதை நிஜமாகவே நடத்திக் காட்டுவது தனிநபர்கூட அல்ல, இந்திய அரசு. சுரண்டப்படுவது வேறு யாரோ அல்ல, அந்த இந்திய அரசுக்கு ஆதாரமாக இருக்கும் இந்தியக் குடிமகன்.விற்பனை வரி, வருமான வரி, சுங்க வரி, சேவை வரி, கலால் வரி என்று எதிலெல்லாம் வரி வசூலிக்க முடியுமோ அதிலெல்லாம் அரசாங்கம் வரி விதித்துத் தனது வருவாயைப் பெருக்கிக் கொள்வது எதற்காக? மக்களின் வசதிக்காக சாலைகள் அமைக்கவும், கல்விச் சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்கவும்தானே வரிப்பணமே வசூலிக்கப்படுகிறது. பிறகு, நாங்கள் உலகத் தரத்தில் சாலைகள் அமைக்கிறோம் என்கிற பெயரில் சாலையில் பயணிக்க ஆங்காங்கே சுங்கம் வசூலிப்பது என்ன நியாயம்? புதிதாக மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு தீர்மானம் எடுக்க இருக்கிறது. அதன்படி ஒப்பிட்டு 60 கி.மீ. தூரத்துக்கு ஒரு சுங்கச்சாவடி அமைத்துக் கட்டணம் வசூலிக்க இருக்கிறது. 1997-ல் இதேபோல தேசிய நெடுஞ்சாலை (கட்டண விதிப்பு மற்றும் வசூல்) விதி கொண்டு வரப்பட்டபோது, பொதுநல அமைப்புகளின் எதிர்ப்புக்கு இணங்கி கிலோமீட்டருக்கு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் செலவானால் மட்டுமே சுங்கம் வசூலிக்கப்படும் என்கிற நிபந்தனையை அரசு ஏற்றது. இப்போது அந்த நிபந்தனையை ஒரு கோடி ரூபாயாக அரசு குறைக்க இருக்கிறது. அதாவது இனிமேல் எந்த தேசிய நெடுஞ்சாலையில் நாம் பயணித்தாலும் 60 கி.மீ. தூரத்துக்கு ஒருமுறை சுங்கம் வசூலிக்கப்படும்.உலகத் தரமான சாலையை உபயோகிக்கும்போது அதற்கான கட்டணத்தை வசூலிப்பதில் என்ன தவறு என்று கேட்கலாம். சேவைக்குக் கட்டணம் வசூலித்தால் என்ன தவறு என்று கேட்பவர்கள் இனிமேல் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மக்களுக்குச் செய்யும் சேவைக்குப் பிரதிபலனாக அன்பளிப்பும் லஞ்சமும் பெறுவதுகூடத் தவறில்லை என்று கூறுவார்களோ என்னவோ?இரண்டு பாதைகள் இருந்து, உலகத் தரமான கட்டணச் சாலை இருந்தால்கூடத் தவறில்லை. இருப்பது ஒரே சாலை, அதுவும் கட்டணச் சாலை மட்டுமே என்றால் அது என்ன நியாயம்? சாலை போட என்ன செலவானது, அன்றாடம் எவ்வளவு வசூலானது, இந்தச் சுங்கம் எப்போது நிறுத்தப்படும் என்கிற வரைமுறை உண்டா என்றால் அதுவும் கிடையாது. சென்னையில் வசிப்பவர்கள் சுங்கம் செலுத்தாமல் மகாபலிபுரத்துக்கு வாடகைக் காரில் பயணிக்க முடியாது என்பது தெரியுமா?இந்த நெடுஞ்சாலைகள் அமைக்க நமது அரசு வெளிநாடுகளிலிருந்தோ தனியாரிடமிருந்தோ கடன் வாங்குகிறதா என்றால் இல்லை. நமது வரிப்பணத்தில்தான் நெடுஞ்சாலைகள் போடப்படுகின்றன. இந்திய அரசின் அன்னியச் செலாவணி இருப்பு 235 பில்லியன் டாலர்கள். நமது தேசிய சேமிப்பு விகிதம் 35 சதவிகிதம். இந்த அரசாங்க மோசடியை எதிர்த்துக் குரல் எழுப்ப ஏன் யாரும் முன்வரவில்லை?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment