Tuesday, February 9, 2010

ஆயுதம் வாங்க கடன் கொடு; இல்லாட்டி வங்கியை மூடு


சம்பவம்
ஆயுதம் வாங்க கடன் கொடு; இல்லாட்டி வங்கியை மூடு
பிப்ரவரி 10,2010,00:00  IST
ராஞ்சி : ஆயுதங்கள் வாங்க கடன் தராததால், வங்கி கிளை ஒன்று இழுத்து மூடப்பட்டுள்ளது; ஜார்க்கண்ட்டில் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலால் இப்படி நடந்துள்ளது.

ஜார்க்கண்ட்டில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளை நக்சலைட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களை ஒடுக்க, துணை ராணுவத்தினர், மாநில போலீசாருக்கு உதவி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபரில் பிர்தா என்ற இடத்தில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளையில் நுழைந்த நக்சலைட்டுகள் ஆயுதம் வாங்குவதற்கு கடன் வழங்கும்படி கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த வங்கி மேலாளர் உட்பட ஐந்து பேரை கடுமையாக தாக்கியுள்ளனர். இவர்களது தாக்குதலில் ஒரு ஊழியர் சுயநினைவிழந்தார். இந்த சம்பவத்தால் வங்கி ஊழியர்கள் அனைவரும் பணி மாற்றம் கேட்டு கொண்டு மற்ற வங்கி கிளைகளுக்கு சென்று விட்டனர். இந்த வங்கியை நடத்த ஆளில்லாத காரணத்தால், தற்போது, இந்த வங்கி, கரா என்ற இடத்தில் உள்ள தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு விட்டது.

பிர்தா கிளையில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் பலர் தற்போது நக்சலைட்டுகளால் எங்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எங்கள் பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்க கடன் வழங்கும்படி கோரி வருகின்றனர். ஆனால், ஆயுதம் வாங்க கடன் வழங்க முடியாது, என இந்த வங்கி திட்டவட்டமாக கூறிவிட்டது. நக்சலைட்டுகள், பிர்தா பகுதி மக்கள் மூலமாக இப்படி மறைமுகமாக கடன் வாங்க முயற்சிப்பதாக வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பிர்தா பகுதியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பென்ஷன்தாரர்கள், இந்த வங்கி கிளையின் மூலம் தான் ஓய்வூதிய தொகையை பெற்று வந்தனர். இப்போது, இந்த கிளை மூடப்பட்டதால் அவர்கள் கவலையடைந்துள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி, மீண்டும் இந்த வங்கி கிளையை, திறக்கும் படி வற்புறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment